கனமழைக்கு 74 வீடுகள் சேதம்: முகாம்களில் 1,000 பேர் தங்க வைப்பு


கனமழைக்கு 74 வீடுகள் சேதம்: முகாம்களில் 1,000 பேர் தங்க வைப்பு
x
தினத்தந்தி 8 Aug 2020 12:16 PM IST (Updated: 8 Aug 2020 12:16 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் கனமழைக்கு 74 வீடுகள் சேதம் அடைந்தன. நிவாரண முகாம்களில் 1,000 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

ஊட்டி,

மலை மாவட்டமான நீலகிரியில் 5 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. கடந்த 5-ந் தேதி சூறாவளி காற்றுடன் மழை வெளுத்து வாங்கியது. இதனால் ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் பைக்காரா, நடுவட்டம், பைன்பாரஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து மரங்கள் விழுந்து கொண்டேயிருந்தது. அன்றைய தினம் மட்டும் 212 மரங்கள் முறிந்து விழுந்தன. மரங்கள் விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

பைக்காரா பகுதியில் மரம் ஒன்று முறிந்து வீடு மீது திடீரென விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை கொரோனா தனி வார்டு, கால்நடை மருத்துவமனை அருகே உள்ள வீடு ஆகியவற்றின் மீது மரங்கள் விழுந்ததில் சேதம் அடைந்தன. எமரால்டில் வீசிய பலத்த காற்றால் அரசு மருத்துவமனை கட்டப்பட்டு வரும் பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டு இருந்த மேற்கூரை பறந்து போனது. மேலும் ஒரு வீட்டின் மேற்கூரை சேதம் அடைந்தது.

நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய தாலுக்காகளில் இதுவரை 74 வீடுகள் சேதம் அடைந்தன. இதில் 4 வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்தோடு, 70 வீடுகளில் ஒரு பகுதி சேதம் அடைந்து இருக்கிறது. இங்கு வசித்து வந்த பொதுமக்களை தீயணைப்பு வீரர்கள், மீட்பு குழுவினர் பாதுகாப்பாக அழைத்து சென்று முகாம்களில் தங்க வைத்து உள்ளனர். வீடுகளை இழந்தவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளனர்.

ஊட்டி தாலுகாவில் கனமழை பெய்தாலும் மற்ற பாதிப்புகள் ஏற்படவில்லை. குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 3 தாலுக்காக்களில் தலா 4 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளது. குந்தா தாலுகாவில் எமரால்டு, கண்ணேரிமந்தனை, குந்தா பாலம், அண்ணாநகர் ஆகிய முகாம்களில் 514 பேர், கூடலூர் பகுதியில் 342 பேர் உள்பட மொத்தம் 1,000 பேர் நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி, வெள்ள பாதிப்பு நிகழ்ந்த இடங்களில் வசித்தவர்கள் மீட்கப்பட்டு தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.


Next Story