முதல்-அமைச்சர் அறிவிப்பு எதிரொலி: இ-பாஸ் வழங்க கூடுதல் ஊழியர்கள் நியமனம்


முதல்-அமைச்சர் அறிவிப்பு எதிரொலி: இ-பாஸ் வழங்க கூடுதல் ஊழியர்கள் நியமனம்
x
தினத்தந்தி 8 Aug 2020 1:00 PM IST (Updated: 8 Aug 2020 1:00 PM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் அறிவிப்பு எதிரொலியாக, இ-பாஸ் வழங்க கூடுதல் ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல், 

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ரெயில், பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் வெளியூர்களில் சிக்கிக் கொண்ட மக்கள், அவசரத்தேவைக்கு இ-பாஸ் எடுத்து செல்லும் நிலை உள்ளது. ஆனால், திருமணம், மருத்துவம், இறப்பு உள்ளிட்ட தேவைகளுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்படுகிறது. இதனால் வெளியூர்களில் வசிப்போர் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் திணறி வருகின்றனர்.

இதற்கிடையே இ-பாஸ் வழங்கும் முறையை எளிதாக்கி, இ-பாஸ் வழங்குவதற்கு மாவட்டந்தோறும் கூடுதலாக குழு நியமிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் இ-பாஸ் வழங்குவதற்கு கூடுதலாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் தொழில் நிறுவனங்கள் மற்றும் இதர தேவைக்கு இ-பாஸ் வழங்குவதற்கு தனித்தனியாக கணினி இயக்குபவர்கள் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் தினமும் 1,300 பேர் வரை இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர். அதில் உரிய சான்றுகளை பதிவேற்றிய நபர்களுக்கு இ-பாஸ் வழங்கப்படுகிறது. அந்த வகையில் தினமும் 450 பேருக்கு இ-பாஸ் வழங்கப்படுகிறது. அதன்படி இதுவரை சுமார் 27 ஆயிரம் பேருக்கு இ-பாஸ் வழங்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே இ-பாஸ் வழங்கும் முறை எளிதாக்கப்பட்டு இருப்பதால், இ-பாஸ் பெறுவோரின் எண்ணிக்கையும் உயரும் வாய்ப்பு உள்ளது.

Next Story