வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கொரோனாவுக்கு த.மா.கா. பிரமுகர் உள்பட 12 பேர் பலி
வேலூர்- திருவண்ணாமலை மாவட்டங்களில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த த.மா.கா.பிரமுகர் உள்பட 12 பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர்.
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதுபோல், இறப்பும் அதிகரித்து வருகிறது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் வேலூரில் உள்ள தனியார் மற்றும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு:-
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் பாத்திமாவதி (வயது 75). இவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டார். கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் வேலூரில் உள்ள தனியார்மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
பீகாரை சேர்ந்தவர் முரளிபிரசாத் (59), வேலூர் ஜெயராம்செட்டி தெருவை சேர்ந்த சரஸ்வதி (55) ஆகியோர் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் நேற்று இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதேபோல திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை சேர்ந்தவர் பராசக்தி (50) என்ற பெண் கடந்த 2-ந் தேதி கொரோனா சிகிச்சை பெற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.
த.மா.கா.பிரமுகர்
குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டை பாலசுப்பிரமணியர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (42), தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நகர செயலாளராக இருந்து வந்தார். அவருக்கு கடந்தசில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் குடியாத்தம் தாலுகாவில் கொரோனா தொற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலையில் 7 பேர் பலி
இதே போல திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 பெண்கள் உள்பட 7 பேர் கொரோனாவுக்கு பலியானர்கள். அதுபற்றிய விவரம் வருமாறு:-
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை சேர்ந்த வாசுதேவன் (52) என்பவர் கடந்த 29-ந் தேதி கொரோனா அறிகுறியால் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவண்ணாமலை அருகில் உள்ள நல்லவன்பாளையத்தை சேர்ந்த மருதேவி (58) என்பவர் கடந்த 1-ந் தேதி திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவண்ணாமலை கல்நகரை சேர்ந்த நாகராஜன் (71) என்பவர் கடந்த 3-ந் தேதி திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவண்ணாமலையை சேர் முதிரிசெட்டியார் (85) என்பவர் கடந்த 3-ந் தேதி திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவண்ணாமலையை சேர்ந்த கனகரத்தினம் (64) என்பவர் கடந்த 5-ந் தேதி கொரோனா அறிகுறியால் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 59 வயது ஆண் ஒருவர் கடந்த ஜூன் மாதம் உடல் நல குறைவால் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். கடந்த 3 நாட்களாக அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆரணி
ஆரணியை அடுத்த ஆகாரம் ஊராட்சியை சேர்ந்தவர் எஸ்.அண்ணாமலை. மேற்கு ஆரணி ஒன்றியக்குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசனின் மாமனாராவார். கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்தார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையொட்டி வேலூர் அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
அவரது உடலை புதைக்க தச்சூர் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மதன் தலைமையில் மருத்துவ குழுவினர் மேற்பார்வையில் ஆகாரம் கிராமத்தில் பள்ளம் தோண்டினர். பின்னர் அவரது உடலை தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்தனர்.
இதன் மூலம் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் மட்டும் 12 பேர் இறந்துள்ளனர்.
Related Tags :
Next Story