மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற தகராறு: கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை - 2 சிறுவர்கள் உள்பட 13 பேர் கைது


மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற தகராறு: கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை - 2 சிறுவர்கள் உள்பட 13 பேர் கைது
x
தினத்தந்தி 9 Aug 2020 4:30 AM IST (Updated: 9 Aug 2020 4:14 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதை தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட தகராறில் கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 சிறுவர்கள் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

அய்யம்பேட்டை,

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள கோபாலபுரம் ஆதிதிராவிட தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் இளையராஜா(வயது 32). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு இவர் வசிக்கும் தெரு வழியாக அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றார். அப்போது ஒரு ஆடு, மணிகண்டன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளில் அடிபட்டது. இதைக்கண்ட இளையராஜா, மோட்டார் சைக்கிளை கவனமாக ஒட்டக்கூடாதா? என மணிகண்டனிடம் கேட்டார். இதனால் இளையராஜாவுக்கும் மணிகண்டனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மணிகண்டன் தனது அண்ணன் ராகேஷ் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து வந்து இளையராஜாவிடம் தகராறில் ஈடுபட்டார்.

இந்த தகராறு முற்றியதில் மணிகண்டன், ராகேஷ் தரப்பினர் அரிவாள், கத்தி, கம்புகளால் இளையராஜாவை சரமாரியாக தாக்கினர். அப்போது அதை இளையராஜாவின் உறவினர் நிஷாந்த்(30) என்பவர் தடுக்க முயன்றார். இதில் அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த இளையராஜா, நிஷாந்த் ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஒரு ஆட்டோவில் ஏற்றி அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே இளையராஜா பரிதாபமாக இறந்தார். நிஷாந்த் முதலுதவி சிகிச்சைக்கு பின் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து தகவல் அறிந்த பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகோபால், அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகால் சோழன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இளையராஜா உடலை பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன்(27), ராகேஷ்(20), ஆகாஷ்(21), புகழேந்தி(28), சிவகரசன்(25), மற்றொரு புகழேந்தி(27), மற்றொரு மணிகண்டன்(19), தேவா(19), தேவேந்திரன்(20) பரமசிவம்(25), சுபாஷ்( 20) மற்றும் 17 வயது சிறுவர்கள் 2 பேர் உள்பட 13 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் இளையராஜா உடல் பிரேத பரிசோதனைக்கு பின் அவரது சொந்த வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என கூறி உடல் ஏற்றப்பட்ட ஆம்புலன்சுடன் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதன்பின் இளையராஜா உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

கொலை செய்யப்பட்ட இளையராஜாவுக்கு ராதிகா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

Next Story