பழனி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா - தனியார் மருத்துவமனையில் அனுமதி
பழனி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இ.பெ.செந்தில்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இ.பெ.செந்தில்குமார். இவர், பழனி சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ. ஆவார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.க. சார்பில் நிவாரணம் வழங்குவதில் தீவிரமாக ஈடுபட்டார். இதேபோல் நேற்று முன்தினம் முன்னாள் முதல்-அமைச்சரும், முன்னாள் தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி மாவட்டம் முழுவதும் தி.மு.க. கிளைக்கழகங்கள் மூலம் கருணாநிதி நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்தார். இதற்காக கடந்த ஒரு வாரமாக சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று நிர்வாகிகளை சந்தித்து வந்தார்.
இதற்கிடையே கடந்த 2 நாட்களாக அவருக்கு திடீரென காய்ச்சல், சளி பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்கு தன்னை உட்படுத்தி கொண்டார். மேலும் திண்டுக்கல் சீலப்பாடியில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்.
இதற்கிடையே அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து அவர் மதுரை தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அவருடைய மனைவிக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story