12 மணி நேர வேலை உத்தரவை ரத்து செய்யக்கோரி 8 மையங்களில் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
12 மணி நேர வேலை உத்தரவை ரத்து செய்யக்கோரி தொழிற்சங்கங்கள் சார்பில் 8 மையங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி,
‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தினை தொடங்கிய ஆகஸ்டு 9-ந் தேதி அன்று (இன்று) இந்தியாவை பாதுகாப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து போராட்டத்தினை முன்னெடுக்குமாறு மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்து இருந்தன. அதன் அடிப்படையில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து புதுவை மாநிலத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுவை ராஜீவ்காந்தி சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் தலைமை தாங்கினார். இதில் துணைத்தலைவர்கள் சந்திரசேகரன், செல்வராசு, மாநில செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். காமராஜர் சிலை, அண்ணாசிலை, சுதேசிமில், இந்திராகாந்தி சிலை, சேதராப்பட்டு, வில்லியனூர், அரியாங்குப்பம் ஆகிய 8 இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டங்களில் தொழிற்சங்க நிர்வாகிகள் சமூக இடைவெளியை பின்பற்றி கலந்து கொண்டனர்.
கோரிக்கைகள்
12 மணி நேர வேலை உத்தரவினை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கோவிட் வரியை ரத்து செய்ய வேண்டும், பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பதை தடை செய்ய வேண்டும். அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
Related Tags :
Next Story