சாத்தான்குளம் வழக்கில் கைதான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மனைவி மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு - பரபரப்பு பேட்டி
சாத்தான்குளம் வழக்கில் கைதான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரையின் மனைவி மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்ததுடன், பரபரப்பு பேட்டி அளித்தார்.
மதுரை,
சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் ஒருவரான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரையின் மனைவி மங்கையர்திலகம் நேற்று மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு போலீஸ் துணை கமிஷனரை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் மரணம் சம்பந்தமாக எனது கணவர் உள்பட போலீசார் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளனர்.
எனது கணவருக்கு ஏற்கனவே நீரிழிவு நோய் மற்றும் இருதய நோய் உள்ளது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவரது உடல்நிலை மோசமடைந்து, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உயிரை காப்பாற்ற வேண்டி எனது சொந்த செலவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க தயாராக உள்ளேன்.
எனது கணவர் 30 ஆண்டுகள் தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி உள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் இருப்பதால், அரசு மருத்துவமனையில் இருந்து மாற்றி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பின்னர் கமிஷனர் அலுவலகத்திற்கு வெளியே வந்த மங்கையர்திலகம் நிருபர்களிடம் கூறியதாவது:-
சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட எனது கணவர் பால்துரைக்கும் இருவர் கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்ட எனது கணவர் தற்போது கை, கால்கள் செயல்படாத நிலைக்கு ஆளாகி உள்ளார். எனவே அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும். மதுரை அரசு மருத்துவமனையில் எனது கணவரை பார்க் கக்கூட விட மறுக்கிறார்கள். அவருக்கு தண்ணீர் கொடுக்க கூட போலீசார் அனுமதி மறுக்கின்றனர். விடிய, விடிய அடித்தவர்களை குற்றவாளி ஆக்குங்கள். எல்லாம் தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டரால்தான் வந்த வினை.
என் கணவர் தட்டார்மடம் போலீஸ்நிலையத்தில் கொரோனா நேரத்தில் பணியில் இருந்தார். அப்போது பறிமுதல் செய்த வண்டியை விடுவிக்குமாறும், அதுதொடர்பான எப்.ஐ.ஆரை கிழித்து போட அந்த போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கூறினார். ஆனால் எனது கணவர் அதனை கிழித்து போட மறுப்பு தெரிவித்ததால், அவரை போலீஸ் நிலையத்திற்கு விடமறுத்து மிரட்டினார். இந்த நிலையில் டி.எஸ்.பி. எனது கணவரை சாத்தான்குளம் போலீஸ் நிலையத்திற்கு ஒரு வாரத்திற்கு மாற்றி விடுவதாக தெரிவித்தார். அன்றைய தினமே ஸ்ரீதர் எனது கணவரை சாத்தான்குளத்துக்கு பணிக்கு வரசொன்னார்.
ஆனால் அவர், “போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் வந்த பிறகு தான் செல்வேன்” என்றார். அன்று அங்கிருந்து போன் வந்ததை தொடர்ந்துதான் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்திற்கு பணிக்கு சென்றார். அங்கு தந்தை, மகன் தாக் கப்பட்ட போது போலீஸ் நிலையத்தில் எனது கணவர் பணியில் இல்லை. எனவே அந்த இரட்டை கொலைக்கும் எனது கணவருக்கும் சம்பந்தமில்லை. ஆனால் பெண் போலீஸ் ஒருவரும், தந்தை, மகனை அடித்த நிலையில் அவரை மட்டும் கைது செய்யாதது ஏன்? அந்த பெண் போலீசை காப்பாற்ற சி.பி.ஐ. முயற்சி செய்வது ஏன்? கொலைக்கு காரணமானவர்களை தண்டியுங்கள். இதில் எனது கணவருக்கு தொடர்பில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story