தேனி மாவட்டத்தில் தி.மு.க. நிர்வாகி உள்பட 3 பேர் கொரோனாவுக்கு பலி - மேலும் 452 பேருக்கு தொற்று
தேனி மாவட்டத்தில் தி.மு.க. நிர்வாகி உள்பட 3 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். மேலும் புதிய உச்சமாக 452 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேனி,
தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் 7 ஆயிரத்து 188 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 119 பேர் பலியானார்கள்.
இந்தநிலையில், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் 2 டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள், 2 நர்சுகள், ஆண்டிப்பட்டியை சேர்ந்தவரான சிங்கம்புணரி தீயணைப்பு நிலைய அலுவலர், வருசநாடு போலீஸ் ஏட்டு, ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் பாலார்பட்டியை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், அவருடைய மனைவியான பெண் போலீஸ் ஆகியோர் உள்பட நேற்று ஒரே நாளில் 452 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய பாதிப்பு என்பது மாவட்டத்தில் இதுவரை ஏற்பட்ட பாதிப்புகளில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. மாநில அளவில் நேற்றை பாதிப்பு எண்ணிக்கையில் தேனி மாவட்டம் 2-வது இடத்தை பிடித்தது. சென்னை முதலிடத்தில் இருந்தது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 640 ஆக அதிகரித்தது.
இதேபோல் கொரோனா பாதிப்புடன் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேனி அல்லிநகரத்தை சேர்ந்த 70 வயது தி.மு.க. முன்னாள் நகர செயலாளர், ஜி.கல்லுப்பட்டியை சேர்ந்த 60 வயது மூதாட்டி, கோம்பையை சேர்ந்த 58 வயது பெண் ஆகியோர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளது.
இதுதவிர கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த 52 வயது நபர் பரிசோதனை முடிவு வரும் முன்பே உயிரிழந்தார். மேலும், ஸ்ரீவில்லிபுத்தூர் இடையன்குளத்தை சேர்ந்த 55 வயது பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.
Related Tags :
Next Story