கனமழையால் வெள்ளப்பெருக்கு: ஆற்றின் கரைகளுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் - கலெக்டர் எச்சரிக்கை


கனமழையால் வெள்ளப்பெருக்கு: ஆற்றின் கரைகளுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் - கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 9 Aug 2020 4:15 AM IST (Updated: 9 Aug 2020 7:21 AM IST)
t-max-icont-min-icon

கனமழையால் முல்லைப்பெரியாறு, கொட்டக்குடி, மூலவைகை உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றின் கரைகளுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று கலெக்டர் பல்லவி பல்தேவ் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேனி,

இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தேனி மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே முல்லைப்பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால், ஆற்றங்கரை பகுதிகளில் வசிக்கின்ற பொதுமக்கள் கவனமுடனும், முன்எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பாதுகாவலர் களின் துணையின்றி ஆற்றங் கரை பகுதிகளில் விளையாடவோ, குளிக்கவோ அனுமதிக்கக்கூடாது. நீர்நிலைகளில் அதிக நீர்வரத்து உள்ளதால் அவற்றில் குளிக்கவோ, துவைக்கவோ கூடாது என்றும், வேறு காரணங்களுக் காகவோ நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்க அனைத்து உள்ளாட்சி அமைப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் மற்றும் மழைநீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து, மீட்பு பணியில் ஈடுபடுவதற்கான மீட்பு குழுக் களை தயார் நிலையில் வைத்திடவும், வெள்ளம் பாதிப்படைய வாய்ப்புள்ள பகுதிகளை கண்டறிந்து, நிவாரண முகாம்களில் பொதுமக்களை தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தாசில்தார்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெள்ள பாதிப்புகள் குறித்த புகார்களை தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக் கப்பட்டுள்ளது. இங்கு பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் புகார்களை பதிவு செய்து, சம்பந்தப்பட்ட பகுதி அலுவலர் களுக்கு உடனடியாக தெரிவித்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு மருத்துவ உதவிகளை அளித்திட மருத்துவக்குழுக்களை தயார் நிலையில் வைத்திட வேண்டும் என மருத்துவப் பணிகள் இணை இயக்குனர், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஆகியோருக்கும், மழையின் காரணமாக கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோயினை தடுத்திட தேவையான மருந்து பொருட்கள் மற்றும் தீவனப் பொருட்கள் இருப்பில் உள்ளதை உறுதி செய்திட வேண்டுமென கால்நடை பராமரிப்புத்துறையினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை சார்பில் வெள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூடைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் பொதுமக்கள் மழை, வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் தொடர்பான தங்களது புகார்களை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 04546-261093 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story