மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி? உறவினர்கள் பரபரப்பு தகவல்


மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி? உறவினர்கள் பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 9 Aug 2020 2:33 AM GMT (Updated: 9 Aug 2020 2:33 AM GMT)

மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி? என்பது குறித்து உறவினர்கள் பரபரப்பு தகவல்களை தெரிவித்தனர்.

கயத்தாறு, 

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே மலைப்பகுதியில் தேயிலை எஸ்டேட் தொழிலாளர்கள் தங்கியிருந்த குடியிருப்பு பகுதியில் கடந்த 6-ந்தேதி இரவில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற மீட்பு பணியில் சுமார் 20 தொழிலாளர்கள் பிணமாக மீட்கப்பட்டனர். மேலும் இடிபாடுகளில் சிக்கிய 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

நிலச்சரிவில் சிக்கிய தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பாரதி நகரைச் சேர்ந்தவர்கள் ஆவர். இப்பகுதியைச் சேர்ந்த 84 தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் தேயிலை எஸ்டேட் பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து வந்தனர். இதனை அறிந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். நிலச்சரிவில் சிக்கிய தங்களுடைய உறவினர்களின் கதி என்ன? என்பதை அறியாத மக்கள் சோகத்தில் மூழ்கினர்.

60 உறவினர்கள் புறப்பட்டனர்

தொடர்ந்து அவர்கள், நிலச்சரிவு நிகழ்ந்த கேரள மாநிலத்துக்கு செல்வதற்கும், நிலச்சரிவில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியும், கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் முறையிட்டனர். உடனே அவர்கள், கேரள மாநிலத்துக்கு செல்வதற்கு இ-பாஸ் வழங்கப்பட்டது. அதன்படி, மாவட்ட நிர்வாகம் அனுமதித்த உறவினர்கள் 60 பேர், 2 வேன்கள், 6 கார்கள் ஆகியவற்றில் நேற்று முன்தினம் இரவில் கேரள மாநிலத்துக்கு புறப்பட்டு சென்றனர்.

நிலச்சரிவில் சிக்கிய கயத்தாறு பாரதிநகரைச் சேர்ந்த தொழிலாளர்களின் உறவினர்கள் கூறியதாவது:-

மண்ணோடு மூடப்பட்ட குடியிருப்புகள்

கேரள மாநிலத்தில் உள்ள தனியார் டீத்தூள் நிறுவனத்துக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட்டில் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கியிருந்து வேலை செய்து வந்தனர். தேயிலை பயிரிடப்பட்ட மலைப்பகுதியின் அடிவாரத்திலேயே ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையால் அமைக்கப்பட்ட வீடுகளில் தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் தங்கியிருந்தனர். அங்கு மலைப்பகுதியில் 30 வீடுகள் என்ற வரிசையில் 4 அடுக்குகளாக 120 குடியிருப்புகளில் தொழிலாளர்கள் வசித்தனர்.

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த 6-ந்தேதி இரவு 11.30 மணி அளவில் மலைப்பகுதியில் இருந்து சேறும் சகதியுமாக பெருக்கெடுத்து குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. இதையடுத்து அங்கிருந்து சில குடும்பத்தினர் வெளியேறி மேடான பகுதிக்கு வந்தனர். தொடர்ந்து அங்கு தங்கியிருந்த மற்ற தொழிலாளர்களை வெளியேறுமாறு கூச்சலிட்டனர். எனினும் அங்கு சில வினாடிகளில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டு குடியிருப்புகளை அமுக்கியது. தங்கள் கண்முன்பே சக தொழிலாளர்களின் குடியிருப்புகள் அனைத்தும் மண்ணோடு மண்ணாக மூடப்பட்டதை அறிந்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மீட்பு பணி

இதற்கிடையே டீத்தூள் நிறுவனத்தின் அதிகாரிகள் வசிக்கும் ராஜமலை பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள பாலம், கனமழை காரணமாக உடைந்தது. எனினும் நிலச்சரிவில் உயிர் தப்பிய தொழிலாளி ஒருவர் மாற்றுப்பாதை வழியாக ராஜமலைக்கு சென்று, நள்ளிரவில் டீத்தூள் நிறுவன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். எனினும் பாலம் உடைந்ததாலும், கனமழை பெய்ததாலும் உடனே சம்பவ இடத்துக்கு யாரும் செல்ல முடியவில்லை.

நேற்று முன்தினம் காலையில் மாற்றுப்பாதை வழியாக சென்று, வனத்துறையினர், உள்ளூர் நிர்வாகத்தினருடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு செல்வதற்கு தற்காலிக பாலம் அமைத்து, மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. தீயணைப்பு துறையினரும், பேரிடர் மீட்பு குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பருவமழை தீவிரம் அடையும்போது, முன்னெச்சரிக்கையாக மலைப்பகுதியில் வசித்தவர்களை மாற்று இடத்தில் தங்க வைத்து இருந்தால், இந்த துயர சம்பவம் நிகழ்ந்து இருக்காது.

இவ்வாறு அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

முதியவர்களுக்கும் இ-பாஸ்

இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணுவதற்கு கேரள மாநிலத்துக்கு செல்வதற்கு, கயத்தாறு பாரதிநகரை சேர்ந்த உறவினர்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டது. பெரும்பாலான தொழிலாளர்களின் பெற்றோர்களுக்கு 60 வயதை கடந்ததால், அவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்படவில்லை. எனினும் முதியவர்களால்தான் குடும்பத்தினரை அடையாளம் காட்ட முடியும் என்பதால், அவர்களுக்கும் இ-பாஸ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.


Next Story