பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர்,
கரூர் மாவட்ட சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி. எல்.பி.எப்., ஐ.என்.டி.யூ.சி. உள்பட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் ஆர்.எம். எஸ். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு எல்.பி.எப். மாவட்ட தலைவர் அண்ணாவேலு தலைமை தாங்கினார். இதில், சி.ஐ.டி.யூ. நிர்வாகிகள் ஜீவானந்தம், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொழிலாளர் சட்டங்களை முற்றிலுமாக நீக்குவது, நான்கு தொகுப்புகளாக குறைப்பது, வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை கைவிட வேண்டும், மின்சார திருத்த சட்டத்தை கைவிட வேண்டும், ரத்து செய்யப்பட்ட பி.எஸ்.என்.எல். டெண்டரை உடனே வழங்க வேண்டும், கொரோனா பெயரை சொல்லி கொண்டு பாதுகாப்பு தொழிற்சாலைகள், நிலக்கரி சுரங்கங்கள், விண்வெளி அறிவியல், அணு ஆற்றல், வங்கி, ரெயில்வே உள்ளிட்டவற்றை தனியாருக்கு விற்க கூடாது. வேலைநீக்கம், சம்பள வெட்டு, வேலை நேரத்தை அதிகரிக்கிற முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும்.
வருங்கால வைப்பு நிதி சந்தாவை 12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்க கூடாது, பொது முடக்கத்தால் வருமானம் இழந்த கட்டுமான தொழிலாளர்கள், உடல் உழைப்பு தொழிலாளர்கள், வருமான வரி செலுத்தும் அளவுக்கு வருமானம் ஈட்டாத குடும்பத்திற்கு 5 மாதத்திற்கு தலா ரூ.7,500 வீதம் ரூ.37,500 வழங்க வேண்டும், கட்டுமானம் ஆட்டோ மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்த தொழிலாளர்கள், பதிவு செய்ய தவறியவர்கள், புதுப்பிக்காதவர்கள் என அனைவருக்கும் ஓய்வூதியர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியும், பொருட்களும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இதேகோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் திருமாநிலையூரில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட பொறுப்பாளர் பாலசுப்பிரமணி தலைமை தாங்கினார். எல்.பி.எப். மாவட்ட தலைவர் பாலன், சி.ஐ.டி.யூ. கிளை தலைவர் சிவகுமார் உள்பட போக்குவரத்து தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் அனைத்து தொழிற்சங்கங்கள் அரவக்குறிச்சி ஒன்றியக்குழு சார்பில் பள்ளப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் அரவக்குறிச்சி ஒன்றிய தலைவர் எம்.ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story