தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கைவிடக்கோரி அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - 13 பணிமனைகளில் நடந்தது
தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கைவிடக்கோரி அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் 13 பணிமனைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விழுப்புரம்,
மத்திய, மாநில அரசுகள், கொரோனா ஊரடங்கு காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சிறப்பாக லாபம் தரும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் போக்கினை கண்டித்தும், இதுநாள் வரை போராடி பெற்ற தொழிலாளர் நல உரிமை சட்டங்களில் திருத்தங்கள், நீக்கங்கள் செய்வதை கண்டித்தும், கொரோனா வைரஸ் பேரிடர் காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தினக்கூலி தொழிலாளர்களுக்கும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் அவர்களின் குடும்பங்களின் பசியை போக்க மாதம் ரூ.7,500 வழங்கக்கோரியும், அரசுத்துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் ஊதியத்தை குறைப்பது போன்ற தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகள் எண் 1, 2, 3 ஆகியவற்றின் முன்பு விழுப்புரம் மண்டல அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச்செயலாளர் பிரபா தண்டபாணி தலைமை தாங்கினார். தலைவர் ஞானசேகரன் அனைவரையும் வரவேற்றார். சி.ஐ.டி.யு. தலைவர் மூர்த்தி, நிர்வாக பணியாளர்கள் முன்னேற்ற சங்க பொருளாளர் குபேரன், ஐ.என்.டி.யு.சி. பொதுச்செயலாளர் முருகானந்தம், மறுமலர்ச்சி தொழிற்சங்க பொதுச்செயலாளர் மனோகரன், அறிவர் அம்பேத்கர் விடுதலை முன்னணி தலைவர் ராமச்சந்திரன், தொ.மு.ச. அமைப்பு செயலாளர் வேலு, பிரசார செயலாளர் ரவிச்சந்திரன், துணைத்தலைவர்கள் சந்திரசேகரன், பெருமாள், துணைச்செயலாளர்கள் ராஜேந்திரன், மனோகரன் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் பணிமனை நிர்வாகிகள் ராஜாராம், வெங்கடேசன் உள்பட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கலந்துகொண்டனர்.
இதேபோல் அரசு போக்குவரத்துக்கழக விழுப்புரம் மண்டலத்துக்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி பணிமனை எண் 1, 2, திண்டிவனம், செஞ்சி, உளுந்தூர்பேட்டை, சின்னசேலம், சங்கராபுரம், திருக்கோவிலூர், புதுச்சேரி, கோயம்பேடு ஆகிய 10 பணிமனைகளிலும் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story