பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Aug 2020 5:11 AM GMT (Updated: 9 Aug 2020 5:11 AM GMT)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்,

கொரோனா பொது முடக்கத்தால் வருமானம் இழந்த கட்டுமானம், அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் வருமானவரி செலுத்தாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7,500 மற்றும் உணவு பொருட்களும் 6 மாதங்களுக்கு வழங்க வேண்டும். 8 மணி நேரமாக உள்ள தொழிலாளர்களின் வேலை நேரத்தை அதிகரிக்க கூடாது. ஒப்பந்த முறையில் பணிநியமனம் செய்யக்கூடாது. சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உடைகள் மற்றும் உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மஞ்சக்குப்பத்தில் நேற்று காலை தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் கருப்பையன், இணை செயலாளர்கள் சுப்புராயன், துணை தலைவர் ஆளவந்தார், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் குளோப், தொ.மு.ச. மாவட்ட இணை செயலாளர் எத்திராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இதேபோல் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மின் ஊழியர் மத்திய அமைப்பு கோட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். போக்குவரத்து ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு. மாநில உறுப்பினர் ஜீவானந்தம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் கூட்டுறவு சங்கம் பெரியசாமி, ரெயில்வே தொழிலாளர் சங்கம் பலராமன், எல்.ஐ.சி. சுந்தரமூர்த்தி, நடைபாதை வியாபாரிகள் இதயத்துல்லா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் கலைச்செல்வன் உள்பட பல்வேறு தொழிற்சங்கத்தினர் கலந்த கொண்டனர்.

வடலூர் பஸ் நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மின் கழக தொ.மு.ச. மாநில துணை செயலாளரும், கடலூர் மாவட்ட செயலாளருமான கே.வேல்முருகன், சி.ஐ.டி.யு. மாநில செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினர். சி.ஐ.டி.யு. தமிழ்வாணன், ஐக்கிய சங்கம் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தார். தொ.மு.ச செல்வமணி வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொழிற்சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் தொ.மு.ச. மாநில பிரசார செயலாளரும், திட்ட இணைச்செயலாளருமான கண்ணன், சி.ஐ.டி.யு. மாவட்ட இணைச்செயலாளர் ஜான்விக்டர், மின் கோட்ட அமைப்பு செயலாளர் பன்னீர்செல்வம், சி.ஐ.டி.யு. மாவட்டக்குழு சீனிவாசன், சி.ஐ.டி.யு. மாவட்டக்குழு ராஜேந்திரன், கார்த்திகேயன், தணிகாசலம், தமிழ்வாணன், பாலவினாயகம், மகேஷ், சக்திவேல், செல்வகுமார், பாஸ்கர், முருகன், பொன்னம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பெண்ணாடம் அடுத்த இறையூரில் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தொழிற்சங்கங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொழிற்சங்க செயலாளர் பரமசிவம் தலைமை தாங்கினார். தி.மு.க. தொழிற்சங்க செயலாளர் சிவசங்கரன், இணை செயலாளர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் காமராஜ், நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். முடிவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்க செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.

Next Story