கொரோனா பரவும் வேகம் அதிகரிப்பு: 5 நாளில் ஆயிரம் பேர் பாதிப்பு - பலி எண்ணிக்கையும் கிடுகிடுவென உயர்வதால் மக்கள் பீதி


கொரோனா பரவும் வேகம் அதிகரிப்பு: 5 நாளில் ஆயிரம் பேர் பாதிப்பு - பலி எண்ணிக்கையும் கிடுகிடுவென உயர்வதால் மக்கள் பீதி
x
தினத்தந்தி 9 Aug 2020 10:41 AM IST (Updated: 9 Aug 2020 10:41 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பரவும் வேகம் அதிகரித்துள்ளது. 5 நாளில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலி எண்ணிக்கையும் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

கடலூர், 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தற்போது 7-வது கட்டமாக வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டும் கொரோனா வைரஸ் பரவும் வேகம் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது. கடலூர் மாவட்டத்திலும் இந்த வைரஸ் பாதிப்பால் தினம் தினம் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை தடுக்க அரசுடன், மாவட்ட நிர்வாகமும் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களும், தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள், செவிலியர்கள், போலீஸ்காரர்கள், முன்கள பணியாளர்கள் என மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டத்தில் கொரோனா பரவும் வேகம் அதிகரித்துள்ளது. ஆம், மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். அது பற்றிய விவரம் வருமாறு:-

கடலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் இறுதி வரை ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. ஏப்ரல் மாதம் முதல் ஜூன் 28-ந் தேதி வரை சுமார் 3 மாதத்தில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது. அப்போது பலி எண்ணிக்கை 5 ஆக இருந்தது. அதன் பிறகு ஜூலை 23-ந் தேதி 2 ஆயிரத்தை தாண்டியது. அதாவது ஆயிரம் முதல் 2 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட சுமார் 25 நாட்கள் எடுத்துக் கொண்டது. அந்த சமயத்தில் 21 பேர் பலியாகி இருந்தனர்.

அதன் பிறகே மாவட்டத்தில் கொரோனா பரவும் வேகமும், அதனால் பலியானோர் எண்ணிக்கையும் வேகமாக அதிகரிக்க தொடங்கியது. ஆம், முதல் 2 ஆயிரம் பேர் பாதிப்புக்குள்ளாக சுமார் 4 மாதங்கள் எடுத்துக் கொண்ட நிலையில், அடுத்த 2 வாரத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும் அந்த 2 வாரத்தில் மட்டும் 39 பேர் பலியாகி உள்ளனர். குறிப்பாக கடந்த 5 நாட்களில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதாவது கடந்த 4-ந் தேதி 264 பேரும், 5-ந் தேதி 171 பேர், 6-ந் தேதி 217 பேர், நேற்று முன்தினம் 213 பேர், நேற்று 193 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தினசரி மாவட்டத்தில் சராசரியாக 3 முதல் 5 பேர் வரை உயிரிழப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

இதுதவிர கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும் நிலையில், குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதாவது கடந்த சில நாட்களாக தினசரி சராசரியாக 200 பேர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், குணமடைபவர்களின் எண்ணிக்கை 100-க்கும் குறைவாகவே உள்ளது.

இதுவரை மாவட்டத்தில் 4,633 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2,489 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். 60 பேர் பலியாகி உள்ளனர். மேலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் 1,940 பேரும், பிற மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் 144 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இன்னும் 2,267 பேருடைய பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. இதனால் மாவட்டத்தில் இன்னும் பலர் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story