சீறிப்பாய்ந்து செல்லும் வெள்ளம்: சித்திரைச்சாவடி தடுப்பணையில் ஆபத்தை உணராமல் குளிக்கும் பொதுமக்கள் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை


சீறிப்பாய்ந்து செல்லும் வெள்ளம்: சித்திரைச்சாவடி தடுப்பணையில் ஆபத்தை உணராமல் குளிக்கும் பொதுமக்கள் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 9 Aug 2020 10:53 AM IST (Updated: 9 Aug 2020 10:53 AM IST)
t-max-icont-min-icon

சித்திரைச்சாவடி தடுப்பணையில் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் குளிக்கிறார்கள். அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேரூர்,

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றின் முதல் அணைக்கட்டாக சித்திரைச்சாவடி தடுப்பணை உள்ளது. இதன் அருகே ராஜவாய்க்கால் மூலம் பிரிக்கப்படும் தண்ணீர் கோவையின் முக்கிய குளங்களுக்கு செல்கிறது.

நொய்யல் ஆற்றின் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் சித்திரைச்சாவடி அணைக்கு தண்ணீர் சீறிப்பாய்ந்து வருகிறது. எனவே அங்கு பொங்கி வரும் புதுவெள்ளத்தை ஆர்வமுடன் பலர் பார்த்து செல்கின்றனர். சிலர் தண்ணீரில் இறங்கி குளிக்கின்றனர். அவர்கள், தண்ணீர் வரும் வேகம் தெரியாமல் குளிக்கும் போது ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிலர் தங்களது செல்போனில் ஆபத்தான முறையில் தண்ணீரின் அருகே சென்று செல்பி எடுக்கின்றனர்.

தடுப்பணை மற்றும் ராஜவாய்க்காலுக்கு செல்லும் தண்ணீரில் இளைஞர்கள் குளிக்கிறார்கள். மலையடிவார பகுதியில் விட்டுவிட்டு பலத்த மழை பெய்வதால், நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து திடீரென அதிகரிக்கும். அப்போது அதில் குளிப்பவர்களை தண்ணீர் அடித்துச் செல்லும் அபாயம் உள்ளது.

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் நொய்யல் ஆற்று மற்றும் தடுப்பணைகளில் பொதுமக்கள் துணி துவைக்க வோ, மீன்பிடிக்கவோ கூடாது. கரையோரத்தில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என பொதுப்பணித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த அறிவிப்பையும் மீறி பலர் சித்திரைச்சாவடி தடுப்பணைக்கு வந்து ஆபத்தான வகையில் குளிப்பது, செல்பி எடுப்பது என்று செயல்படுகின்றனர். இதை தடுக்க தொண்டாமுத்தூர் போலீசாரும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story