சுஷாந்திடம் பண மோசடி புகார் நடிகை ரியாவின் சகோதரரிடம் 18 மணி நேரம் விசாரணை அமலாக்கத்துறை கிடுக்கிபிடி
நடிகர் சுஷாந்த் சிங்கிடம் பண மோசடி செய்தது தொடர்பாக நடிகை ரியா சக்கரபோர்த்தியின் சகோதரரிடம் அமலாக்கத்துறையினர் 2-வது முறையாக 18 மணி நேரம் கிடுக்கிபிடி விசாரணை நடத்தினர்.
மும்பை,
பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு அவரது காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி தான் காரணம் என அவரது தந்தை பீகார் போலீசில் புகார் அளித்தார். மேலும் சுஷாந்த் சிங் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.15 கோடி மோசடி செய்யப்பட்டு உள்ளது என்று அளித்த புகாரின் அடிப்படையாக கொண்டு பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக அமலாக்கத்துறையினர் நடிகையும், சுஷாந்த் சிங்கின் காதலியுமான ரியா சக்கரபோர்த்தியிடம் கடந்த வெள்ளிக்கிழமை சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். அன்றைய தினம் ரியாவின் தந்தை இந்திரஜித், சகோதரர் சோவிக், சி.ஏ. ரித்தேஷ் ஷா, தொழில் மேலாளர் சுருதிமோடியிடமும் விசாரணை நடத்தினர்.
இரவு முழுவதும் விசாரணை
இந்தநிலையில் அமலாக்கத்துறையினர் ரியாவின் சகோதரர் சோவிக்கை மீண்டும் விசாரணைக்கு அழைத்து இருந்தனர். அவர் நேற்று முன்தினம் மதியம் மும்பை பல்லர்டு எஸ்டேட்டில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வந்தாா். அவரிடம் அதிகாரிகள் இரவிலும் விடிய, விடிய விசாரணை நடத்தினர். சுமார் 18 மணி நேரம் விசாரணைக்கு பிறகு நேற்று காலை 6.30 மணிக்கு தான் அமலாக்கத்துறை அலுவலகத்தை விட்டு அவர் வெளியே வந்தார்.
விசாரணையின்போது சொந்த தொழில், வருமானம், முதலீடு, ரியா மற்றும் சுஷாந்த் சிங்குடன் உள்ள கொடுக்கல், வாங்கல் விவகாரம் குறித்த தகவல்களை கேட்டு உள்ளனர். எனினும் விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
ரியாவிடம் இன்று...
இந்தநிலையில் அமலாக்கத்துறையினர் ரியா மற்றும் அவரது தந்தையிடம் மீண்டும் விசாரணை நடத்த உள்ளனர். அதன்படி ரியா இன்று(திங்கட்கிழமை) ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை நடந்த விசாரணையின் போது ரியா கொடுத்த தகவல்களின்படி அவரது வருமானத்தைவிட அவர் வாங்கிய சொத்துகளின்மதிப்பு அதிகம் உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டதாக தெரிகிறது.
Related Tags :
Next Story