புதிதாக 264 பேருக்கு தொற்று புதுவையில் கொரோனாவுக்கு மேலும் 7 பேர் உயிரிழப்பு கடந்த 5 நாட்களில் 29 பேர் சாவு
புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில் புதிதாக 264 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் பலியாகினர். கடந்த 5 நாட்களில் மட்டும் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுச்சேரி,
புதுச்சேரியில் நேற்று 958 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 264 பேருக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 63 பேர் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரியிலும், 69 பேர் ஜிப்மரிலும், 37 பேர் காரைக்காலிலும், 17 பேர் ஏனாமிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 78 பேர் மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக காத்திருப்பில் உள்ளனர்.
இவர்களை சேர்த்து மொத்தம் 5,382 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3,201 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2,094 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த 29 பேர் கோவிட் கேர் சென்டருக்கு மாற்றப்பட்டுள்ளனர். புதுவையில் 663 பேர், ஏனாமில் 49 பேர் என 712 பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 46,878 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 40,575 பேருக்கு கொரோனா இல்லை என முடிவுகள் வந்துள்ளது. 428 பேரின் பரிசோதனை முடிவுகள் காத்திருப்பில் உள்ளன.
7 பேர் பலி
புதுவையில் 4 பேர், காரைக்காலில் 2 பேர், ஏனாமில் ஒருவர் என 7 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர். அரியாங்குப்பம் பாரதி நகர் குறிஞ்சி வீதியை சேர்ந்த 49 வயது ஆண் நபருக்கு ஏற்கனவே உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு இருந்தது. அவருக்கு கடந்த 27-ந் தேதி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புதுச்சேரி பாரதி வீதியை சேர்ந்த 80 வயது மூதாட்டி ஏற்கனவே நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்ததால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 7-ந் தேதி அவருக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. உடனே வீட்டில் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கோவிந்தசாலை பகுதியை சேர்ந்த 60 வயது முதியவருக்கு கடந்த 25-ந் தேதி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
உழவர்கரை சாலை வீதியை சேர்ந்த 58 வயது பெண் ஏற்கனவே நீரிழிவு மற்றும் இருதயநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, கடந்த 5-ந் தேதி கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.
காரைக்கால்
காரைக்கால் திருபட்டினம் பட்டினச்சேரியை சேர்ந்த 65 வயது மூதாட்டி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் கடந்த 8-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். காரைக்கால் கிளிஞ்சல்மேடு சுனாமிநகரை சேர்ந்த 70 வயது மூதாட்டியும் தொற்றால் பாதிக்கப்பட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் கடந்த 8-ந் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
ஏனாம்
ஏனாம் டோபி வீதியை சேர்ந்த 38 வயது ஆண் நபர் கடந்த 4-ந் தேதி உயிரிழந்தார். முன்னதாக மேற்கொண்ட பரிசோதனை முடிவு வந்ததில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களை சேர்த்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.6 சதவீதமாக உள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் 29 பேர் தொற்றுக்கு பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story