தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிப்பு: சென்னையில் சாலைகள் வெறிச்சோடின


தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிப்பு: சென்னையில் சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 10 Aug 2020 5:58 AM IST (Updated: 10 Aug 2020 5:58 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் நேற்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டதன் காரணமாக சாலைகள் வெறிச்சோடின.

சென்னை,

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 7-வது கட்டமாக ஆகஸ்டு 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற போதிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் கடை, இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, பாலகம், மருந்தகம் மற்றும் ஆஸ்பத்திரிகள் தவிர்த்து மளிகை மற்றும் காய்கறி கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. சென்னையில் நேற்றைய தளர்வில்லாத முழு ஊரடங்கு உத்தரவையொட்டி, நகரின் பிரதான சாலைகளான அண்ணா சாலை, மெரினா கடற்கரை காமராஜர் சாலை, ராஜாஜி சாலை, என்.எஸ்.சி. போஸ் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு 100 அடி சாலை, வடபழனி ஆற்காடு சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, மாதவரம் நெடுஞ்சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை உள்பட அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

கிரிக்கெட் விளையாடிய சிறுவர்கள்

பிரதான சாலைகளில் வந்து இணையும் சிறிய சாலைகளை போலீசார் தடுப்புகள் வைத்து அடைத்து வாகன நடமாட்டத்தை கட்டுப்படுத்தினர். ஆட்கள் நடமாட்டம் இல்லாத பல சிறிய சாலைகளில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடியதை பார்க்க முடிந்தது. ஆம்புலன்ஸ், அத்தியாவசிய சரக்கு வாகனங்களை தவிர்த்து மற்ற வாகனங்கள் சாலைகளில் அதிக அளவில் தென்படவில்லை. சாலைகளில் வந்த ஒருசில வாகனங்கள் பெரும்பாலும் மருத்துவ காரணங்களுக்காகவே வந்தன. காரணமின்றி அனாவசியமாக சாலையில் வந்த வாகனங்களை போலீசார் மடக்கிப்பிடித்து வழக்குப்பதிவு செய்தும், அபராதம் விதித்தும், வாகனங்களை பறிமுதல் செய்தும் நடவடிக்கை எடுத்தனர்.

சென்னையின் பிரதான வர்த்தக தலங்களான தியாகராயநகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை போன்ற இடங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. வழக்கமாக மீன்களை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் காசிமேடு மீன் மார்க்கெட் பகுதியும் மக்கள் அரவம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

கோவில்கள் இன்று திறப்பு

சென்னையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக சாலைகளில் பள்ளமான இடங்களில் நீர் தேங்கிக் கிடந்தது. மேலும், மாநகராட்சியில் சிறிய கோவில்கள் இன்று முதல் திறக்கலாம் என்று தளர்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ஆடி மாத ஞாயிற்றுக்கிழமை என்பதால் பல அம்மன் கோவில்கள் முன்பு கூழ் வார்க்கும் சம்பவங்களும் அரங்கேறின. மேலும், பல இடங்களில் வீடுகளில் பெண்கள் கூழ் காய்த்து வழங்கியதையும் பார்க்க முடிந்தது.


Next Story