காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.50 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு - மேட்டூர் அணைக்கு 1.30 லட்சம் கனஅடி தண்ணீர் வருகிறது
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. மேலும் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
பென்னாகரம்,
கர்நாடக, கேரளா மாநில நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் இந்த 2 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி உபரி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் காவிரி நுழைவிடமான கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு கரைபுரண்டு வந்தது. இதன் காரணமாக ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரித்து 10 மணி நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடியானது. மதியம் 12 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. பின்னர் மாலையில் நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடியாக அதிகமானது.
இதனிடையே தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் படகில் சென்று அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதால் ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளை தண்ணீர் மூழ்கடித்தப்படி பாறைகள் தெரியாத அளவிற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் அருவிக்கு செல்லும் நடைபாதையில் சுமார் 3 அடி உயரத்துக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக ஐந்தருவி தெரியாதபடி தண்ணீர் சீறிபாய்ந்து செல்கிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரி கரையோர பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
மேலும் ஊட்டமலை, சத்திரம், நாடார் கொட்டாய் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேறும்படி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அறிவுறுத்தினர். நீர்வரத்து அதிகரித்துள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார், ஊர்க்காவல் படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். மேலும் தீயணைப்பு படையினர், மீட்பு படையினரும் ஒகேனக்கல்லில் முகாமிட்டுள்ளனர்.
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையை வந்தடைகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. மேலும் தமிழக-கர்நாடக எல்லையான அடிபாலாறு பகுதியில் இருகரைகளையும் தொட்டப்படி காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து மேட்டூர் அணையை நோக்கி ஓடுகிறது. நேற்று முன்தினம் மாலை அணைக்கு வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
நேற்று காலை வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகமானது. நேற்று மாலை நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 1 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. தொடர்ந்து இரவு 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்று காலை அணையின் நீர்மட்டம் 75.85 அடியாக இருந்தது. இரவு நீர்மட்டம் 81 அடியை தாண்டியது. நேற்று முன்தினம் இரவு அணையின் நீர்மட்டம் 73 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அணையில் இருந்து பாசன தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story