தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை தாண்டியது நெல்லை, தென்காசியில் 335 பேருக்கு தொற்று
தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை தாண்டியது. நெல்லை, தென்காசியில் 335 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் 9 பேர் பலியாகி உள்ளனர்.
தூத்துக்குடி,
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் மட்டும் நேற்று மேலும் 162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,578-ஆக உயர்ந்துள்ளது. இதில் 4,297 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். 2,202 பேர் நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி, அரசு சிகிச்சை மையங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே பாளையங்கோட்டை தியாகராஜநகரை சேர்ந்த 67 வயது ஆண் ஒருவர் கொரோனாவுக்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 173 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர்கள் அனைவரும் தென்காசி அரசு ஆஸ்பத்திரி, நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி, அரசு சிகிச்சை மையங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,132-ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,915 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 1,172 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் செங்கோட்டையை சேர்ந்த 67 வயது ஆண் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
7 பேர் பலி
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து காய்ச்சல் சிறப்பு முகாம்கள் மற்றும் சளி மாதிரிகள் சேகரிப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. இதனால் பலர் தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு வருகின்றனர். அதே போன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
நேற்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த 60 வயது மூதாட்டி, ஆத்தூரை சேர்ந்த 47 வயது பெண் ஆகியோரும் இறந்து உள்ளனர். இதுதவிர நெல்லை, மதுரை ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 4 பேரும் இறந்து உள்ளனர். இதுதவிர சாயல்குடியை சேர்ந்த 42 வயது உடைய ஒருவரும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் இறந்து உள்ளார். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 75-ஆக அதிகரித்து உள்ளது.
9 ஆயிரத்தை தாண்டியது
நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் 251 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியது. நேற்று வரை 9 ஆயிரத்து 159 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 7 ஆயிரத்து 263 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 1,821 பேர் தொடர்ந்து பல்வேறு ஆஸ்பத்திரி மற்றும் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story