சோழவந்தான், மண்ணச்சநல்லூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 2 பேருக்கு கொரோனா


சோழவந்தான், மண்ணச்சநல்லூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 2 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 10 Aug 2020 3:45 AM IST (Updated: 10 Aug 2020 7:32 AM IST)
t-max-icont-min-icon

சோழவந்தான் தொகுதி மற்றும் மண்ணச்சநல்லூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை,

அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றார்கள். இதே போல் முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், நடிகருமான கருணாஸ் எம்.எல்.ஏ.வும் பாதிக்கப்பட்டார்.இந்த நிலையில் மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மாணிக்கமும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளார். இவர் மதுரை புதூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவர் கொரோனா ஊரடங்கையொட்டி பல்வேறு பகுதிகளுக்குச் சென்று நலத்திட்ட உதவிகளும், பேரூராட்சி பணியாளர்கள், தூய்மை பணியாளர்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களும் வழங்கினார். மேலும் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று கொரோனா விழிப்புணர்வு பணிகளிலும் ஈடுபட்டார்.

இந்த நிலையில் அவருக்கு நேற்று முன்தினம் இரவு சளி தொந்தரவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தார்.அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனே மாணிக்கம் எம்.எல்.ஏ. அங்கேயே தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான பரமேஸ்வரி முருகன் கடந்த சில நாட்களாக சளி மற்றும் இருமல் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். கொரோனா தொற்று உள்ளதா? என அறிய அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் 9 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள முதல் எம்.எல்.ஏ. பரமேஸ்வரி முருகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story