சிவகாசி அருகே, புதுப்பெண் கொலையில் 7 வாலிபர்களிடம் விசாரணை - உடலை வாங்க உறவினர்கள் மறுத்ததால் பரபரப்பு
சிவகாசி அருகே புதுப்பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 7 வாலிபர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அந்த பெண்ணின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகாசி,
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்-ஆலமரத்துப்பட்டி ரோட்டில் உள்ள பெரியார்காலனியை சேர்ந்தவர் செல்வப்பாண்டியன் (வயது 26). இவருக்கும் திருத்தங்கல் சத்யாநகரை சேர்ந்த பிரகதிமோனிகா (24) என்பவருக்கும் கடந்த 1½ மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.
தாய், தந்தை, மனைவியுடன் செல்வப்பாண்டியன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் செல்வப்பாண்டியனும், அவருடைய தாய், தந்தை ஆகியோரும் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டனர்.
பட்டதாரி பெண்ணான பிரகதி மோனிகா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். வேலைக்கு சென்றவர்கள் அனைவரும் மாலையில் தான் வீடு திரும்புவார்கள் என்பதால் தாமதமாக உணவு சமைக்க தயாரான போது, வீட்டிற்குள் புகுந்த ஒரு கும்பல் பிரகதி மோனிகாவின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்து விட்டு, அவர் கழுத்தில் அணிந்திருந்த ½ பவுன் தாலி மற்றும் 1 பவுன் சங்கிலி ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை நடந்து 24 மணி நேரம் கடந்த பின்னரும் முதலில் போலீசாருக்கு எந்த துப்பும் துலங்காமல் இருந்தது. தனிப்படையினரும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினார்கள்.
இதை தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த 7 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். ஒரே இடத்தில் வைத்து விசாரணை நடத்தினால் விசாரணை முழுமை பெறாது என்ற எண்ணத்தில் 2 வாலிபர்களை மாரனேரி போலீஸ் நிலையத்திலும், 5 வாலிபர்களை சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்திலும் வைத்து விசாரித்ததாக தெரியவருகிறது.
இதற்கிடையில் நேற்று முன்தினம் மாலையில் சம்பவ இடத்தில் இருந்து புதுப்பெண் பிரகதி மோனிகாவின் உடலை பரிசோதனைக்காக போலீசார் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் நேற்று பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடலை பெற்றுக்கொள்ள வலியுறுத்தியபோது பிரகதி மோனிகாவின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்துவிட்டனர்.
உண்மை குற்றவாளிகளை கைது செய்த பின்னர்தான் உடலை பெற்றுக்கொள்வோம் என்று கூறினர். இதை தொடர்ந்து விருதுநகரில் இருந்து வந்த உயர் போலீஸ் அதிகாரிகள் பிரகதி மோனிகா குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் கொலை குற்றவாளிகளை கைது செய்த பின்னர் தான் உடலை பெற்றுக்கொள்வோம் என்று உறுதியாக தெரிவித்துவிட்டனர்.
பின்னர் போலீசார் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் மாலை 6 மணிக்கு பிரகதி மோனிகாவின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். போலீசாரின் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் இருக்கும் வாலிபர்களில் 3 பேர் இந்த கொலையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது.
Related Tags :
Next Story