மாவட்டத்தில், முழு ஊரடங்கால் கடைகள் அடைப்பு - இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களுக்கு அபராதம்
மாவட்டத்தில் முழு ஊரடங்கால் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கரூர்,
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த மாதத்தை தொடர்ந்து, இந்த மாதமும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி இந்த மாதத்தின் 2-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி கரூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கரூரில் ஜவஹர்பஜார், கோவைரோடு, வையாபுரிநகர், வடிவேல்நகர், பசுபதிபாளையம், பழைய பைபாஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. நகர பகுதிகளில் உள்ள டெக்ஸ்டைல் மற்றும் கொசுவலை நிறுவனம் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் அடைக்கப்பட்டு இருந்தன.
வெங்கமேடு, தாந்தோணிமலை, பசுபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் தரைக்கடைகள் அமைத்து மீன் வியாபாரம் நடைபெற்றது. ஆனால் நேற்று கடைகள் அமைக்க தடை இருந்ததால் அப்பகுதிகளில் எந்தவித மீன் கடைகளும் அமைக்கப்படவில்லை. உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோவைரோடு, கரூர் பஸ் நிலையம், முருகநாதபுரம், ராமகிருஷ்ணபுரம், சின்ன ஆண்டாங்கோயில் ரோடு உள்ளிட்ட பகுதிகள், ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.
ஆம்புலன்ஸ் வேன்கள் மற்றும் முக்கிய அரசு துறை வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டன. முன்னதாக சுங்ககேட், திருமாநிலையூர், லைட்ஹவுஸ், சர்ச் கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் இரும்பு தடுப்புகள் அமைத்து வாகனங்களில் வருபவர்களை விசாரித்து அனுப்பி வைத்தனர்.
நகரப்பகுதியில் உள்ள அனைத்து ஓட்டல்களும் அடைக்கப்பட்டதால் வெளியூர்களில் இருந்து இங்கு வந்து தங்கி பணிபுரியும் தொழிலாளர்கள், உழவர் சந்தை அருகில் உள்ள அம்மா உணவகத்திற்கு சென்று சாப்பிட்டு சென்றனர். இதனால் அந்த உணவகத்தில் சிறிது கூட்டம் காணப்பட்டது. மருந்து கடைகள், ஆவின் பாலகம் உள்ளிட்ட கடைகள் மட்டும் திறந்து இருந்த நிலையில் மக்கள் நடமாட்டம் முற்றிலும் இல்லாததால், அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.
நொய்யல் சுற்று வட்டார மளிகை கடைகள், ஜவுளிக்கடைகள், ஓட்டல்கள், இறைச்சி கடைகள், பேக்கரிகள், டீக்கடைகள், பூச்சி மருந்து கடைகள், உரக்கடைகள், எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. முத்தனூர், நொய்யல் குறுக்குச்சாலை, புன்னம் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அடைக்கப்பட்டிருந்தன. மருந்து கடைகள், மருத்துவமனைகள் மட்டும் திறந்திருந்தன.
இந்நிலையில் கரூர்- சேலம், சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலைகளிலும், கரூர்- ஈரோடு, ஈரோடு- கரூர் நெடுஞ்சாலைகளிலும் தங்கு தடையின்றி சரக்கு லாரிகளும், சரக்கு ஏற்றப்படாத லாரிகள் மற்றும் கார்கள், இருசக்கர வாகனங்களும் சென்று வந்தன. சோதனைச்சாவடியில் எந்தவித கெடுபிடியுமின்றி அவை சென்று வந்தன. ஆங்காங்கே இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் சுற்றித்திரிந்தன. சில வெற்றிலை கடைகள், சில ஓட்டல்கள், பேக்கரிகளில் விற்பனை நடைபெற்றதை காண முடிந்தது.
வேலாயுதம்பாளையம் அருகே தோட்டக்குறிச்சி பேரூராட்சி தளவாபாளையம் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம், கடந்த வார ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்ட முழு ஊரடங்கின்போதும் செயல்பட்டது. இந்நிலையில் நேற்றும் அந்த பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு பேரல் மீது மூங்கில் வைத்து மூடியதுபோல் இருந்தது. ஆனால் அந்த பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு வாகனங்கள் வரும்போது மூங்கிலை நீக்கிவிட்டு, வாகனங்களை உள்ளே அனுமதித்து பெட்ரோல் நிரப்பி, அனுப்பினர். அந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தில் லாரி, இருசக்கர வாகனங்கள் போன்றவை பெட்ரோல் நிரப்புவதற்காக வந்து சென்றன. முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி பெட்ரோல் விற்பனை நிலையம் செயல்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குளித்தலை பகுதியில் நேற்று பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மற்றும் கடைகள் மூடப்பட்டிருந்தன. பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. குளித்தலை பஸ்நிலையம், சுங்ககேட், பெரியபாலம் போன்ற முக்கிய பகுதிகளில் போலீசார், ஊர்காவல்படையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேவையின்றி வெளியே நடந்து சென்ற நபர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இருப்பினும் சாலைகளில் பலர் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்ததை காண முடிந்தது. ஆங்காங்கே சோதனை செய்யும் பணியில் ஈடுபட்ட போலீசார், இருசக்கர வாகனங்களை நிறுத்தி உரிய காரணமின்றி சென்றவர்களுக்கு அபராதம் விதித்தனர். சிலர் போலீசாரை கண்டு, மாற்றுவழியில் சென்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிலர் இறைச்சி கடைகள் ஏதேனும் உள்ளதா என்று ஆவலோடு தேடி பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் சென்றனர்.
Related Tags :
Next Story