அழிக்காலில் கடல் சீற்றத்தால் வாலிபர் பலி: உடலை வாங்க மறுத்து மீனவர்கள் சாலை மறியல்


அழிக்காலில் கடல் சீற்றத்தால் வாலிபர் பலி: உடலை வாங்க மறுத்து மீனவர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 10 Aug 2020 11:38 AM IST (Updated: 10 Aug 2020 11:38 AM IST)
t-max-icont-min-icon

கடல் சீற்றத்தால் சுவர் இடிந்து விழுந்து பலியான வாலிபரின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜாக்கமங்கலம்,

குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே அழிக்கால் பகுதியில் நேற்று முன்தினம் பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டது. கடலில் எழுந்த ராட்சத அலைகள் கரையை கடந்து அழிக்கால் மேற்கு தெருவில் புகுந்து 50-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்தது. அப்போது, அதே பகுதியை சேர்ந்த பிரதீப் அஸ்வின் (வயது 27) தனது வீட்டிற்குள் கடல்நீர் புகுவதை தடுக்க வாசலில் மணல் மூடைகளை அடுக்கி வைத்து கொண்டிருந்தார். அவருக்கு பக்கத்து வீட்டை சேர்ந்த 2 வாலிபர்கள் உதவி செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென வந்த ராட்சத அலையால் வீட்டின் சுற்று சுவர் இடிந்தது. இந்த சுவர் பிரதீப் அஸ்வின் மீது விழுந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவருடன் இருந்த இரண்டு வாலிபர்களும் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்த ராஜாக்கமங்கலம் போலீசார் விரைந்து சென்று பிரதீப் அஸ்வினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதி மீனவர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

உறவினர்கள் போராட்டம்

இந்தநிலையில் நேற்று காலை 11 மணியளவில் பிரதீப் அஸ்வினின் உறவினர்கள் மற்றும் மீனவர்கள் ஏராளமானோர் அழிக்கால் பகுதியில் திரண்டனர். அவர்கள் பலியான வாலிபரின் குடும்பத்திற்கு நிவாரணமாக ரூ.30 லட்சம் வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். காயமடைந்த 2 பேருக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும், அழிக்கால் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அப்துல்லா மன்னான், குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ் சாஸ்திரி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

போராட்டம் நடத்தியவர்கள், தங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை வாலிபரின் உடலை வாங்குவதில்லை என உறுதியாக கூறினர். இதையடுத்து, பொதுமக்களின் கோரிக்கையை மனுவாக பெற்றுக்கொண்ட அதிகாரிகள் இதுதொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் உடனே நிறைவேற்ற வேண்டும் என்றும், இல்லையெனில் நாளை (அதாவது இன்று) அடுத்தக்கட்ட போராட்டம் நடத்தப்படும் என்று கூறிவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டம் சுமார் 2 மணி நேரம் வரை நீடித்தது. இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story