உரிய சிகிச்சை அளிக்காததால் இளம்பெண் உயிரிழந்ததாக கூறி கஸ்தூரிபா அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் ஆர்ப்பாட்டம்
உரிய சிகிச்சை அளிக்காததால் இளம்பெண் உயிரிழந்தாக கூறி கஸ்தூரிபா அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை,
சென்னை நீலாங்கரை பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி முத்தழகி (வயது 27). முத்தழகி கர்ப்பிணியாக இருந்ததால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்தநிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பிரசவத்துக்காக முத்தழகியை, திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் (ஜூலை) 24-ந்தேதி அனுமதித்தனர்.
இந்த நிலையில், அவருக்கு குழந்தை பிறந்து தாயும், சேயும் நலமுடன் இருந்ததால், கடந்த மாதம் 30-ந்தேதி டாக்டர்கள் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். வீடு சென்ற முத்தழகிக்கு மறுநாளே உடல்நிலை மீண்டும் சரி இல்லாமல் ஆனது. இதையடுத்து நடராஜன் உடனடியாக அவரை கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். இதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக முத்தழகி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2-ந்தேதி முத்தழகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் முறையாக சிகிச்சை அளிக்காததால் தான் முத்தழகி உயிரிழந்துவிட்டதாக கூறி, அவரது கணவர் நடராஜன் மற்றும் 25-க்கும் மேற்பட்ட அவரது உறவினர்கள் நேற்று கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனை முன்னே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவல்லிக்கேணி போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின்னர் முத்தழகியின் உறவினர்கள் சம்பவ இடத்தைவிட்டு கலைந்து சென்றனர். திடீரென மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story