தேவதுர்கா தாலுகாவில் 5 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் நாசம்: விவசாயிகள் கண்ணீர்
ராய்ச்சூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் தேவதுர்கா தாலுகாவில் 5 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் நாசம் அடைந்தன. இதனால் விவசாயிகள் கண்ணீர் விட்டு அழுதனர்.
ராய்ச்சூர்,
மராட்டியத்தில் பெய்த கனமழையால் அங்கு உள்ள கொய்னா அணையில் இருந்து கிருஷ்ணா ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு இருந்தது. இதனால் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே யாதகிரி மாவட்டம் சுராப்புரா தாலுகா நாராயணபுராவில் அமைந்து உள்ள பசவசாகர் அணை மற்றும் விஜயாப்புரா மாவட்டத்தில் உள்ள அலமட்டி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் 2 அணைகளில் இருந்து வினாடிக்கு 7 லட்சம் கனஅடி தண்ணீர் கிருஷ்ணா ஆற்றில் திறந்து விடப்பட்டு இருந்தது.
இதனால் யாதகிரி, ராய்ச்சூர், பாகல்கோட்டை மாவட்டங்களில் பல கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்து கொண்டது. மேலும் அந்த மாவட்டங்களில் கனமழையும் கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு இடங்களில் பாலங்கள் அடித்து செல்லப்பட்டன. இதன்காரணமாக போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் ராய்ச்சூர் மாவட்டம் தேவதுர்கா தாலுகாவில் பெய்த கனமழை மற்றும் கிருஷ்ணா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தேவதுர்கா தாலுகாவில் உள்ள பல்வேறு கிராமங்களுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் விவசாயிகள் பயிரிட்டு இருந்த ராகி, சோளம், அரிசி உள்ளிட்ட பயிர்களை மழைநீர் அடித்து சென்றது. தேவதுர்கா தாலுகாவில் மட்டும் விவசாயிகள் பயிரிட்டு இருந்த 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகின.
இதனால் விவசாயிகள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ஒவ்வொரு ஆண்டும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறோம். ஆனால் இதற்கு நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுப்பது இல்லை. இந்த ஆண்டு கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் நாங்கள் விவசாய பணிகளை மேற்கொண்டு வந்தோம். தற்போது மழையில் பயிர்கள் நாசமாகி விட்டது. இதனால் எங்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறினர்.
இந்த நிலையில் கொப்பல் மாவட்டம் கங்காவதி தாலுகா கனபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வந்தது. இதனால் கனபட்டி கிராமத்தின் வழியாக செல்லும் விஜயநகர் கால்வாயில் நேற்று திடீரென உடைப்பு ஏற்பட்டது.
இதனால் கால்வாய் தண்ணீர் அருகே இருந்த தென்னை தோட்டம், விளைநிலங்களை சூழ்ந்து கொண்டது. இதில் விவசாயிகள் பயிரிட்டு இருந்த நெற்பயிர்கள் உள்ளிட்ட விளை பயிர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. இதுபற்றி அறிந்த அதிகாரிகள் அங்கு வந்து பார்வையிட்டனர். அப்போது நீர்ப்பாசனத்துறை என்ஜினீயரின் அலட்சியத்தால் தான் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு விளைநிலங்களில் தண்ணீர் புகுந்து விட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story