முதல்-மந்திரி எடியூரப்பா டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார்: 3 நாட்கள் தனிமையில் இருக்க டாக்டர்கள் அறிவுரை
கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெங்களூரு மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் குணமடைந்ததை தொடர்ந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார்.
பெங்களூரு,
பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்-மந்திரி எடியூரப்பா கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து விட்டார். இதையடுத்து, நேற்று அவர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார். அவர் 3 நாட்கள் வீட்டு தனிமையில் இருக்க டாக்டர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
கர்நாடக மாநில முதல்-மந்திரியாக இருந்து வருபவர் எடியூரப்பா. இவருக்கு 77 வயதாகிறது. கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தினமும் அதிகாரிகள், மந்திரிகளுடன் முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். அதே நேரத்தில் அவரது இல்ல அலுவலகம் மற்றும் வீட்டில் பணியாற்றும் ஊழியர்கள், போலீஸ்காரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, முதல்-மந்திரி எடியூரப்பாவும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அவருக்கு கடந்த 2-ந் தேதி இரவு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, பழைய விமான நிலைய ரோட்டில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் முதல்-மந்திரி எடியூரப்பா அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எந்த விதமான அறிகுறியும் இல்லாமல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. ஆனாலும் அவருக்கு வயதாகி விட்டதால் டாக்டர்களின் அறிவுறுத்தலின்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், முதல்-மந்திரி எடியூரப்பாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அதாவது நீரிழிவு, ரத்த அழுத்தத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்பதை டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, நேற்று முன்தினம் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அந்த பரிசோதனையில் நேற்று அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே நேரத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா கொரோனா பாதிப்பில் இருந்தும் மற்ற உடல் நல பாதிப்பில் இருந்தும் முழுமையாக குணம் அடைந்திருப்பதாக மணிப்பால் மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக நேற்று மாலை 4 மணி அளவில் மருத்துவமனையில் இருந்து முதல்-மந்திரி எடியூரப்பா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து, மருத்துவமனையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தன்னுடைய ஹாவேரி இல்லத்திற்கு புறப்பட்டு சென்றார்.
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ள எடியூரப்பாவை 3 நாட்கள் வீட்டு தனிமையில் இருக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் இன்னும் 3 நாட்கள் தனது வீட்டில் இருந்தபடியே எடியூரப்பா அலுவலக பணியாற்ற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பாதிப்புக்கு உள்ளான முதல்-மந்திரி எடியூரப்பா 9 நாட்கள் சிகிச்சைக்கு பின்பு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story