கடந்த 5-ந் தேதி சூறாவளி காற்றுடன் மழை: மும்பையில் ரூ.500 கோடி சேதம் - உடனடி நிவாரணம் வழங்க பிரதமரிடம் உத்தவ் தாக்கரே கோரிக்கை
மும்பையில் ரூ.500 கோடிக்கு சேதம் ஏற்பட்டு இருப்பதாகவும், எனவே மத்திய அரசு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் பிரதமர் மோடியிடம் உத்தவ் தாக்கரே கோரிக்கை வைத்தார்.
மும்பை,
கடந்த 5-ந் தேதி மும்பையில் சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக மும்பையில் ரூ.500 கோடிக்கு சேதம் ஏற்பட்டு இருப்பதாகவும், எனவே மத்திய அரசு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் பிரதமர் மோடியிடம் உத்தவ் தாக்கரே கோரிக்கை வைத்தார்.
வெள்ளம் பாதித்த மராட்டியம், அசாம், பீகார், உத்தரபிரதேசம், கர்நாடகம், கேரளா மாநில முதல்-மந்திரிகளுடன் நேற்று பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசியதாவது:-
நிசர்கா புயல் காரணமாக ஜூன் 3-ந் தேதி மும்பை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது ரூ.1,050 கோடிக்கு சேதம் ஏற்பட்டது. இதேபோல கடந்த 5-ந் தேதி மும்பையில் மணிக்கு 70 கி.மீ. முதல் 106 கி.மீ. வரை வேகத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் ரூ.500 கோடிக்கு சேதம் ஏற்பட்டது. இந்த பாதிப்புகளை சரி செய்ய மத்திய அரசு சார்பில் உடனடியாக நிதியுதவி வழங்க வேண்டும்.
இதுபோன்ற இடர்பாடுகளை கையாளும் வகையில் பிரதமர் தலைமையில் குழு அமைக்கப்பட வேண்டும்.
இந்துமாதா, தாதர், வடாலா போன்ற இடங்களில் மழை வெள்ளம் தேங்குவதை நிரந்தரமாக தடுக்க மகல் பகுதியில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட வேண்டியது உள்ளது. மத்திய வர்த்தக அமைச்சகத்திடம் உள்ள இதற்கு தேவையான இடத்தை மத்திய அரசு மும்பை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசினார்.
Related Tags :
Next Story