தஞ்சை அருகே, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.23 லட்சம் கையாடல் - முன்னாள் செயலாளர் கைது
தஞ்சை அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.23 லட்சம் கையாடல் செய்ததாக முன்னாள் செயலாளரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சையை அடுத்த செங்கிப்பட்டி அருகே உள்ள புதுகரியாப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆண்டியப்பன்(வயது 60). இவர், ஆவாரம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆண்டியப்பன் செயலாளராக பணி புரிந்தபோது உறுப்பினர்கள் பலருக்கு பொது நகைக்கடன் வழங்கப்பட்டது.
இந்த கடன் பெற்றவர்கள் 2017-18-ம் ஆண்டில் படிப்படியாக கடனை திருப்பி செலுத்தினர். ஆனால் இந்த தொகையானது உறுப்பினர்களின் பெயரில் வரவு வைக்கப்படவில்லை. இந்த நிலையில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் திடீரென தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் ஆய்வு நடத்தினர்.
அப்போது ஆவாரம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர்கள் செலுத்திய தொகை வரவு வைக்காதது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் தணிக்கை மேற்கொண்டபோது 32 உறுப்பினர்கள் செலுத்திய ரூ.22 லட்சத்து 80 ஆயிரத்து 48-யை கணக்கில் வரவு வைக்காமல் கையாடல் செய்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக துணைப்பதிவாளர் முருகன், தஞ்சை வணிக குற்றபுலனாய்வு பிரிவில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சித்ரா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, ஏட்டுகள் ரத்தினகுமார், அசோக்ராஜ், நந்தகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், இந்த கையாடலில் ஆண்டியப்பன் ஈடுபட்டது தெரிய வந்தது.
அதன்பேரில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையை குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் மேற்கொண்டு ஆண்டியப்பனை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது.
பின்னர் அவரை திருவையாறு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் அடைத்தனர்.
Related Tags :
Next Story