சோழன்பட்டி கிராமத்தில் சாலையை அகற்ற கிராம மக்கள் எதிர்ப்பு
சோழன்பட்டி கிராமத்தில் சாலையை அகற்ற கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
செந்துறை,
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள மணக்குடையான் ஊராட்சிக்கு உட்பட்ட சோழன்பட்டி கிராம மக்கள், மணக்குடையானில் இருந்து சோழன்பட்டி செல்வதற்கு ஒரு மெட்டல் சாலையை நீண்ட காலமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களை தனியார் சிமெண்டு ஆலை நிர்வாகம் வாங்கியதை தொடர்ந்து, அந்த சாலையையும் 20 ஆண்டுகளுக்கு அரசிடம் குத்தகைக்கு எடுத்தது. அதற்கு பதிலாக மற்றொரு இடத்தில் தார் சாலை அமைத்து கொடுத்தது.
இதைத்தொடர்ந்து சிமெண்டு ஆலை நிர்வாகம் அந்த சாலை பகுதியை சேர்த்து சுரங்கம் அமைக்க கடந்த 10 ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது. ஆனால், அதற்கு அப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பாதையை அகற்றி தரும்படி குவாகம் போலீசாரிடம் சிமெண்டு ஆலை நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று குவாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.
இதனை கண்ட அப்பகுதி கிராம மக்கள் திரண்டு வந்து நாங்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வரும் இந்த பாதையை அகற்றக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து செந்துறை தாசில்தார் முத்துகிருஷ்ணன், அரியலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு திருமேனி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் இதில் உடன்பாடு ஏற்படாததால் அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கிருந்து திரும்பி சென்றனர். இதைத்தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story