எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு வெளியீடு: மாவட்டத்தில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி - கணிதத்தில் 133 பேர் சதம்
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டதில், திருச்சி மாவட்டம் 100 சதவீதம் தேர்ச்சியை பெற்றது. கணித பாடத்தில் 133 பேர் 100 மதிப்பெண் எடுத்தனர்.
திருச்சி,
கொரோனாவிற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் கடந்த மார்ச் மாதம் நடைபெறவேண்டிய எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மாணவர்கள் அரையாண்டு மற்றும் காலாண்டு தேர்வுகளில் எடுத்த மதிப்பெண் மற்றும் பள்ளிக்கு வருகை தந்த நாட்களை கருத்தில் கொண்டு மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை மூலம் வெளியிடப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் 455 பள்ளிகளை சேர்ந்த 17,714 மாணவர்கள், 17,825 மாணவிகள் என மொத்தம் 35,539 பேர் அரையாண்டு மற்றும் காலாண்டு தேர்வினை எழுதி இருந்தார்கள். அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று உள்ளனர். இதன்மூலம் திருச்சி மாவட்டம் 100 சதவீத தேர்ச்சியை பெற்று உள்ளது. கடந்த ஆண்டு 96.45 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று இருந்தனர்.
கணித பாடத்தில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 133 மாணவ-மாணவிகள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று உள்ளனர். இதுதவிர தமிழில் 9 பேர், ஆங்கிலத்தில் 5, அறிவியல் பாடத்தில் 127, சமூக அறிவியல் பாடத்தில் 60 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்து இருக்கிறார்கள்.
தேர்வு முடிவுகள் நேற்று மாணவ-மாணவிகளின் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. அதனை பார்த்து அவர்கள் மதிப்பெண் விவரங்களை தெரிந்து கொண்டனர். இருந்தாலும் பல மாணவ-மாணவிகள் ஆர்வ மிகுதியால் தாங்கள் படித்த பள்ளிக்கு வந்தும் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டு இருந்த மதிப்பெண் விவரங்களை பார்த்தனர்.
Related Tags :
Next Story