மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை: பாபநாசம் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டுகிறது


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை: பாபநாசம் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டுகிறது
x
தினத்தந்தி 11 Aug 2020 6:42 AM IST (Updated: 11 Aug 2020 6:42 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டுகிறது. குண்டாறு, ராமநதி அணைகள் நிரம்பி வழிகின்றன.

நெல்லை, 

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதனால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தென்காசி, கடையம், அம்பை, பாபநாசம் பகுதியில் நேற்று முன்தினம் இரவில் பலத்த மழை பெய்தது.

பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம் அணைப்பகுதியில் 14 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 379 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 805 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. அணைக்கு 4 ஆயிரத்து 379 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

நேற்று முன்தினம் 92.80 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து நேற்று மாலை 4 மணிக்கு 98 அடியாக உயர்ந்துள்ளது. அணைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துக்கொண்டே இருப்பதாலும் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டுகிறது. அணை 100 அடியை தாண்டினால் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் தண்ணீர் வழங்குவதில் பிரச்சினை இருக்காது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே இருக்கிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 123 அடியாக இருந்தது. ஒரே நாளில் 7 அடி உயர்ந்து நேற்று 130 அடியாக உள்ளது.

மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 72.60 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 43 அடியாகவும், நம்பியாறு அணை 10.13 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணை 10.25 அடியாகவும் உள்ளது.

36.10 அடி உயரம் கொண்ட குண்டாறு அணை நிரம்பியது. இதனால் அணைக்கு வரும் 39 கன அடி தண்ணீரும், அப்படியே திறந்துவிடப்படுகிறது. 84 அடி கொண்ட ராமநதி அணை நிரம்பி 82 அடியாக உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வருகிற 113.85 கன அடி தண்ணீரும், அப்படியே திறந்துவிடப்படுகிறது. கடனாநதி அணை 78.20 அடியாகவும், கருப்பாநதி அணை 67.59 அடியாகவும் உள்ளது. 132.22 அடி கொண்ட அடவிநயினார் அணை வேகமாக நிரம்பி வருகிறது. அணையின் நீர்மட்டம் 127.50 அடியாக உள்ளது. இதனால் அணைக்கு 82 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 5 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

பாபநாசம் காரையாறு, அம்பை, ராமநதி, செங்கோட்டை பகுதியில் நேற்று மதியம் மழை பெய்தது. குண்டாறு அணைப்பகுதியில் நேற்று மதியம் 30 நிமிடம் பலத்த மழை பெய்தது.

நெல்லை, தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு மில்லிமிட்டரில் வருமாறு:-

குண்டாறு-25, ராதாபுரம்-20, அடவிநயினார்-18, கடனா-16, பாபநாசம்-14, சிவகிரி-10, அம்பை-10, சங்கரன்கோவில்-8, ராமநதி-8, செங்கோட்டை-7, தென்காசி-6, கருப்பாநதி-5, மணிமுத்தாறு-5, கொடுமுடியாறு-5, நம்பியாறு-5, நாங்குநேரி-5, நெல்லை-4, பாளையங்கோட்டை-4, ஆய்குடி-4, சேர்வலாறு-3.


Next Story