ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 491 பேருக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 16,873 ஆக உயர்வு


ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 491 பேருக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 16,873 ஆக உயர்வு
x
தினத்தந்தி 11 Aug 2020 7:26 AM IST (Updated: 11 Aug 2020 7:26 AM IST)
t-max-icont-min-icon

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 491 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 873 ஆக உயர்ந்தது.

வேலூர், 

வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் என்ஜினீயர் பிரிவில் பாதாள சாக்கடை திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணிபுரியும் 2 பேருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி காணப்பட்டன. அதையடுத்து 2 பேருக்கும் சளிமாதிரி சேகரிக்கப்பட்டன. அதன் பரிசோதனை முடிவில் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

வேலூர் சுண்ணாம்புகார தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடை நடத்தி வரும் வியாபாரிகள் மற்றும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் என்று 120 பேருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சளி மாதிரி சேகரிக்கப்பட்டன. அதில், 4 வியாபாரிகள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதையடுத்து அந்த கடைகள் மூடப்பட்டன.

வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் 4 டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள் உள்பட 20 பேருக்கு கொரோனா உறுதியானது. அதையடுத்து அவர்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் அந்த மருத்துவமனையில் வேறு நோய்களுக்காக விடுதியில் தங்கி சிகிச்சை பெற்று வந்த 4 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

அதைத்தவிர வேலூர் மத்திய ஆண்கள் ஜெயில் காவலர், மேல்ஆலங்காயம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரியும் வேலூரை சேர்ந்த நபர், அரியூரில் உள்ள தனியார் மருத்துவமனை நர்சு, மாநகராட்சி பகுதியில் 82 பேர் உள்பட வேலூர் மாவட்டம் முழுவதும் 201 பேர் ஒரே நாளில் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,642 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 206 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 7,542 ஆக உயர்ந்துள்ளது.

இதில், 1,754 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 44 ஆயிரத்து 844 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதில் 1,620 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது. மாவட்டம் முழுவதும் 1,548 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 84 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,689 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று 47 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 36 ஆயிரத்து 529 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மேலும் திருப்பத்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் திருப்பத்தூரில் ஒரே தெருவில் 17 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

Next Story