செங்குணம் சுடுகாடு இடத்தில் முறைகேடாக பெறப்பட்ட பட்டாவை ரத்து செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
செங்குணம் கிராமத்தில் சுடுகாடு இடத்தில் முறைகேடாக பெறப்பட்ட பட்டாவை ரத்து செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போளூர்,
போளூரை அடுத்த செங்குணம் கிராமத்தில் ஆதிதிராவிடர் இன மக்கள் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு 5 ஏக்கர் நிலத்தை சுடுகாட்டுக்காக ஒதுக்கி உள்ளது. இதில் 2 ஏக்கர் நிலம் சுடுகாடாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மற்ற 3 ஏக்கர் பகுதி பாறை, குன்றுகளாக உள்ளதால் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளது.
சமீபத்தில் இறந்தவர்கள் உடல் அடக்கம் செய்ய அங்கு குழி வெட்டும்போது சிலர் இது எங்கள் பட்டா நிலம் என்று தெரிவித்து குழி வெட்டுவதைத் தடுத்துள்ளனர். அப்போது சுடுகாடு இடத்தில் சிலர் முறைகேடாக பட்டா பெற்று இருப்பது தெரிய வந்தது.
ஆக்கிரமிப்பு செய்து முறைகேடாகப் பட்டா பெற்று உள்ளதை ரத்து செய்து, அந்த இடத்தை மீட்டு தரக் கோரி, ஏற்கனவே கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். எந்த நடவடிக்கையும் இல்லாததால் முறைகேடாக சிலருக்கு பட்டா வழங்கியதை ரத்து செய்து, நிலத்தை மீட்டு தரக் கோரி நேற்று காலை பங்களாமேடு பகுதியில் உள்ள வேலூர்-திருவண்ணாமலை சாலையில் ஆறுமுகதாசன் தலைமை 50 பெண்கள் உள்பட சுமார் 100 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், இன்ஸ்பெக்டர் அருண்குமார், துணைத் தாசில்தார் சம்பத், வருவாய் ஆய்வாளர் பிரேம்நாத் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இதையடுத்து அனைவருக்கும் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அங்கு ஒரு மணி நேரம் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story