கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலி: ஒரே நாளில் 18 டாக்டர்கள் உள்பட 287 பேருக்கு தொற்று - பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது


கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலி: ஒரே நாளில் 18 டாக்டர்கள் உள்பட 287 பேருக்கு தொற்று - பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது
x
தினத்தந்தி 11 Aug 2020 3:30 AM IST (Updated: 11 Aug 2020 10:00 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலியானார்கள். மேலும் புதிய உச்சமாக ஒரே நாளில் 18 டாக்டர்கள் உள்பட 287 பேருக்கு தொற்று உறுதியானது. அதனால் பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 4,779 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 2,599 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். 62 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வெளியானது. இதில் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பில் புதிய உச்சமாக 287 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது.

இவர்களில் கடலூர், கீரப்பாளையம், குமராட்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த 18 டாக்டர்கள், சிதம்பரம், கடலூர், குமராட்சி பகுதியை சேர்ந்த செவிலியர்கள் 5 பேர், லேப் டெக்னீசியன் 2 பேர், மருந்தாளுனர் ஒருவர், களப்பணியாளர்கள் 5 பேர், மருத்துவமனை ஊழியர் ஒருவர், 3 போலீஸ்காரர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 3 பேருக்கு தொற்று உறுதியானது.

இதேபோல் சென்னை, மும்பை, துபாயில் இருந்து கடலூர் மாவட்டம் வந்த 9 பேருக்கும், 9 கர்ப்பிணிகளுக்கும், அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த நோயாளி ஒருவருக்கும், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 62 பேருக்கும், விருத்தாசலம் சிறை கைதி ஒருவருக்கும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 167 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,066 ஆக உயர்ந்தது.

இதற்கிடையே மாவட்டத்தில் வாலிபர் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்தவர் 30 வயது வாலிபர். சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சைக்காக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரிடம் இருந்து உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டதில், தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட வாலிபர் உயிரிழந்த சம்பவம், அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிதம்பரத்தை சேர்ந்த 81 முதியவரும், திட்டக்குடியை சேர்ந்த 60 வயது பெண்ணும் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அவர்கள் பரிதாபமாக இறந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மட்டும் 137 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். மேலும் 1,547 பேருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது.

Next Story