கோவில்களில் தேங்காய், பூ, பழம் கொண்டு செல்ல தடை - கலெக்டர் கதிரவன் தகவல்
கோவில்களில் தேங்காய், பூ, பழம் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு,
கொரோனா ஊரடங்கு காரணமாக வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் ரூ.10 ஆயிரத்துக்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ள கோவில்கள், ஆலயங்கள், மசூதிகள், தர்காக்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதில் பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்து வழிபாட்டு தலங்களின் பொறுப்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தடைசெய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் நபர்களுக்கு கோவில்களில் நுழைய அனுமதி இல்லை என்று அறிவிப்பு செய்ய வேண்டும். பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். சிறிய கோவில்கள், சிறிய மசூதிகள், தர்காக்கள், ஆலயங்கள் நுழைவு வாயிலில் கிருமி நாசினி கட்டாயம் வழங்கி கைகளை சுத்தப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். பக்தர்கள் கால்களை நீரில் சுத்தம் செய்து பின் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்புதான் கோவில்களுக்குள் அனுமதிக்க வேண்டும்.
பக்தர்களின் உடல் வெப்பநிலை அறியும் தெர்மல் ஸ்கேனர் கொண்டு காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும். கோவில் வெளிப்புறம் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் போதிய சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும். கோவில்களில் உள்ள சாமி சிலைகளை தொடக்கூடாது. கோவில்களில் நடைபெறும் உற்சவங்களின்போது பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. மேலும் பஜனை குழு, பக்தி குழு ஆகியவற்றை அனுமதிக்க கூடாது.
அர்ச்சகர்கள் கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், விபூதி, பூ, தீர்த்தம் மற்றும் இதர பிரசாதங்கள் தொட்டு வழங்குவதை தவிர்த்து, பாக்கெட்டுகளில் வழங்க வேண்டும். பக்தர்கள் வழிபாடு செய்ய பொதுவான தரைவிரிப்புகளை பயன்படுத்தக்கூடாது. அவர்கள் தங்களுடன் கொண்டு வரும் துணிகள் அல்லது விரிப்புகளை திரும்ப கொண்டு செல்வதை உறுதி செய்யப்பட வேண்டும்.
திருமடப்பள்ளி, அன்னதானக்கூடங்களில் பணியாளர்கள் உணவு தயார் செய்யும்போது போதிய சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கோவில்களின் தரைப்பகுதி நாள்தோறும் பலமுறை தூய்மைப்படுத்த வேண்டும். பக்தர்கள் விட்டு செல்கின்ற முகக்கவசம் மற்றும் கையுறைகளை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும்.
பக்தர்கள் தேங்காய், பூ, பழம் உள்ளிட்ட பொருட்களை கோவிலுக்கு கொண்டு வர அனுமதிக்கக்கூடாது. வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வரும் பக்தர்களை பகுதி பகுதியாக அனுமதிக்கலாம். திருமண நிகழ்ச்சிகள் மசூதி வளாகத்தில் நடைபெறும்போது 50 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது. ஒரே நேரத்தில் ஒரு திருமண நிகழ்ச்சி மட்டும் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ச.கவிதா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரை, ஈரோடு ஆர்.டி.ஓ.சைபுதீன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story