திண்டுக்கல்லுக்கு குடிநீர் வழங்கும் ஆத்தூர் காமராஜர் அணை நீர்மட்டம் 7.9 அடியாக உயர்வு
திண்டுக்கல்லுக்கு குடிநீர் வழங்கும் ஆத்தூர் காமராஜர் அணையின் நீர்மட்டம் 7.9 அடியாக உயர்ந்தது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவாரத்தில் காமராஜர் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 23.5 அடி ஆகும். மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் குடகனாறு, கூழையாறு ஆகியவற்றில் இருந்து வரும் தண்ணீர் அணையில் சேருகிறது. இந்த அணையின் நீர் முழுவதும் குடிநீருக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
அதன்மூலம் திண்டுக்கல் மட்டுமின்றி 6 கிராமங்களுக்கும் குடிநீர் கிடைத்து வருகிறது. இதற்கிடையே கடந்த ஆண்டு பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் அணை முழுமையாக நிரம்பவில்லை. மேலும் இந்த ஆண்டும் 6 மாதங்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யவில்லை. இதன் காரணமாக அணை முற்றிலும் வறண்டதால், குடிநீர் எடுப்பது தடைபட்டது.
இதற்கிடையே கடந்த சில நாட்களாக காமராஜர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் அவ்வப்போது நல்ல மழை பெய்கிறது. இதனால் 2 ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அணைக்கு தண்ணீர் வரத்தொடங்கியது. இதன் விளைவாக அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 7.9 அடியாக இருந்தது. அதோடு 50 கனஅடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அதோடு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, நீர்மட்டம் மேலும் உயரும் வாய்ப்பு உள்ளது.
Related Tags :
Next Story