குன்றத்தூர் அருகே காவலாளியை தாக்கி ரூ.12 லட்சம் தாமிர கம்பிகள் கொள்ளை
குன்றத்தூர் அருகே காவலாளியை தாக்கி ரூ.12 லட்சம் தாமிர கம்பிகள் கொள்ளையடிக்கப்பட்டது.
பூந்தமல்லி,
குன்றத்தூர் மாணிக்கம் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கம், சிப்காட் பகுதியில் டிரான்ஸ்பார்மர்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ரமேஷ் (52) காவலாளியாக வேலை செய்து வருகிறார். புதிதாக தொழிற்சாலை திறக்கப்பட்டுள்ளதால் இங்கு பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.
நேற்று காலை தொழிற்சாலைக்கு வந்த ஊழியர்கள் காவலாளி ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று திரும்பினார். நேற்று அதிகாலை தொழிற்சாலைக்குள் நுழைந்த மர்ம நபர்கள் தூங்கிக்கொண்டிருந்த காவலாளி ரமேஷை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
தாமிர கம்பிகள் திருட்டு
பின்னர் அங்கு இருந்த 2 டன் தாமிர கம்பிகளை டெம்போவில் ஏற்றிக்கொண்டு சென்று விட்டனர் என்பது தெரியவந்தது. கொள்ளையடிக்கப்பட்ட தாமிர கம்பிகளின் மதிப்பு ரூ.12 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாமிர கம்பிகளை கொள்ளையடித்து சென்ற நபர்களை தேடி வருகின்றனர். புதிதாக தொடங்கப்பட்டுள்ள தொழிற்சாலையில் ஆட்கள் நடமாட்டம் இருக்காது என்பதை கண்காணித்த கொள்ளையர்கள் கொள்ளையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. மேலும் இங்கு கண்காணிப்பு கேமராக்கள் முழுமையாக பொருத்தப்படாததால் கொள்ளையர்களை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே திருமுடிவாக்கம் பகுதியில் தாமிர கம்பிகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story