வேலூர் மாவட்டத்தில் பரணி கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
வேலூர் மாவட்டத்தில் பரணி கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. ரத்தினகிரி, வள்ளிமலை உள்ளிட்ட முக்கிய கோவில்கள் திறக்கப்படாததால் பக்தர்கள் சிலரே காவடி எடுத்து சென்றனர்.
வேலூர்,
முருகன் கோவில்களில் நடைபெறும் முக்கியமான திருவிழாக்களில் ஆடிக்கிருத்திகை விழாவும் ஒன்றாகும். இதையொட்டி பக்தர்கள் விரதம் இருந்து காவடி எடுத்து ரத்தினகிரி, வள்ளிமலை, திருத்தணியில் உள்ள முருகன் கோவில்களுக்கு நடைபயணம் மற்றும் பஸ்களில் செல்வது வழக்கம். ஆடிக்கிருத்திகைக்கு முந்தைய நாள் பரணி கிருத்திகையாகும். அன்றைய தினமும் பக்தர்கள் பரணி காவடி எடுத்து முருகன் கோவில்களுக்கு செல்வார்கள். வள்ளிமலை, ரத்தினகிரி முருகன் கோவில்களுக்கு காவடி எடுத்து நடைபயணமாக வரும் பக்தர்களுக்கு வேலூர் பகுதியில் அன்னதானம், மோர் வழங்கப்படும்.
ஆனால் இந்தாண்டு கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக ரத்தினகிரி, வள்ளிமலை உள்ளிட்ட முக்கிய கோவில்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. மேலும் பொதுமக்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதனால் வழக்கமான காவடி ஊர்வலங்கள் மற்றும் பொதுமக்களின் கூட்டம் இல்லாமல் கோவில்கள் வெறிச்சோடி காணப்பட்டன. சிலர் மோட்டார் சைக்கிளில் காவடி எடுத்து அருகேயுள்ள முருகன் கோவில்களுக்கு சென்றனர்.
மூலவருக்கு வெள்ளிக்கவசம்
பரணி கிருத்திகையையொட்டி நேற்று காலை 6 மணிக்கு ரத்தினகிரி பாலமுருகன் கோவில் நடை திறக்கப்பட்டது. வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மூலவருக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து பாலமுருகனடிமை சுவாமிகள் சிறப்பு பூஜை செய்தார். அதைத்தொடர்ந்து காலை 7.15 மணிக்கு கோவில் பூட்டப்பட்டது. ரத்தினகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பக்தர்கள் பரணி காவடி எடுத்து வந்து கோவில் மலையடிவாரத்தில் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.
வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. சைதாப்பேட்டை வேலூர்-ஆற்சாடு சாலையில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, பூஜை நடந்தது. அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சாமி தரிசனம் செய்தனர். மேலும் பரணி காவடி எடுத்து நடந்து சென்ற பக்தர்களும் முருகனை வணங்கினர்.
இதேபோன்று காமராஜர் சிலை அருகேயுள்ள பேரி சுப்பிரமணியசுவாமி கோவில், பாலமதி கோவில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களில் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜை நடந்தது.
Related Tags :
Next Story