வேலூர் நகரின் முக்கிய பகுதிகளில், ரூ.4¾ கோடியில் 950 கண்காணிப்பு கேமராக்களை பொருத்த ஏற்பாடு
வேலூர் நகரின் முக்கிய பகுதிகளில், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.4 கோடியே 90 லட்சம் மதிப்பில் 950 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்,
மத்திய அரசின், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் வேலூர் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் நடைபெற மத்திய, மாநில அரசுகள் சார்பில் தலா ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது முதல் கட்டமாக பாதாள சாக்கடை திட்டம், ஒகேனக்கல் குடிநீர் இணைப்பு, அங்கன்வாடி மையங்கள், நவீன வாகன நிறுத்துமிடங்கள் அமைத்தல், அரசு அலுவலகங்களில் சோலார் தகடுகள் பொருத்துதல், கோட்டை அகழியை தூர்வாரி அழகுபடுத்துதல், புதிய பஸ் நிலையத்தை நவீனமுறையில் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் வேலூர் மாநகராட்சி பகுதியில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் பொருட்டு முக்கிய பகுதிகளில் 2 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளிடம் கலந்து ஆலோசனை நடத்தினர். காவல்துறையினர் தெரிவித்த முக்கிய பகுதிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தேர்வு செய்த இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த தீர்மானிக்கப்பட்டது. தற்போது முதல் கட்டமாக வேலூர் நகரில் உள்ள 4 போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் 950 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.
ரூ.4 கோடியே 90 லட்சத்தில்..
இதுகுறித்து வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
வேலூர் வடக்கு, தெற்கு, சத்துவாச்சாரி, பாகாயம் ஆகிய 4 போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.4 கோடியே 90 லட்சம் மதிப்பில் 950 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் செல்லும் வாகனங்கள், சங்கிலி பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் எளிதில் அடையாளம் கண்டறிந்து கைது செய்ய முடியும்.
கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட அந்தந்தப் போலீஸ் நிலையத்தில் மானிட்டர் அமைக்கப்படும். மேலும் இதற்கான சேவையகம் (சர்வர்) போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இயங்கும். கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணி விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து காட்பாடி, விருதம்பட்டு, விரிஞ்சிபுரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் 2-ம் கட்டமாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story