இலங்கை தாதா அங்கொட லொக்கா வழக்கு விசாரணைக்கு உதவிய மதுரை சி.பி.சி.ஐ.டி. உயர் அதிகாரிக்கு கொரோனா - கோவை குழு திரும்பி சென்றது
இலங்கை தாதா அங்கொட லொக்கா வழக்கு விசாரணைக்கு உதவிய மதுரை சி.பி.சி.ஐ.டி. உயர் அதிகாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் கோவையில் இருந்து வந்த விசாரணை குழு திரும்பி சென்றது.
மதுரை,
இலங்கையின் நிழல் உலக தாதா அங்கொட லொக்கா. இவர் பிரதீப்சிங் என்ற பெயரில் மதுரையில் வசிப்பதாக போலி ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை தயாரித்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் கடந்த மாதம் கோவையில் இறந்த அவரது உடலை மதுரைக்கு கொண்டு வந்து தகனம் செய்துள்ளனர். இது தொடர்பாக மதுரையை சேர்ந்த வக்கீல் சிவகாமிசுந்தரி, ஈரோடு தியானேஸ்வரன், அங்கொட லொக்காவுடன் இருந்த அம்மானி தான்ஷி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு குறித்து கோவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மதுரையில் விசாரணை நடத்துவதற்கு சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு பரமசாமி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் மதுரையில் வக்கீல் சிவகாமிசுந்தரி தங்கிய வீடுகளில் சோதனை செய்து பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினார்கள்.
அது தவிர சிவகாமிசுந்தரியின் பெற்றோர், அவரது முன்னாள் கணவர், அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர், அக்கம்பக்கத்தினர் என பலரை மதுரை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
கோவையில் இருந்து வந்த விசாரணை குழுவினருக்கு மதுரை அலுவலகத்தில் பணிபுரியும் சி.பி.சி.ஐ.டி. உயர் அதிகாரி ஒருவர் பல்வேறு உதவிகளை செய்து வந்தார். இந்த நிலையில் அவர் சில தினங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்த போது அவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. அதை தொடர்ந்து அவருடன் இருந்த சிலர் தங்களை தனிமைப்படுத்தி கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றி அறிந்ததும் கோவையில் இருந்து வந்த விசாரணை குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் தங்களை தனிமைப்படுத்த நேற்று முன்தினம் இரவு கோவை திரும்பி சென்றதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே சாத்தான்குளம் வழக்கை விசாரிக்க டெல்லியில் இருந்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் மற்றும் அவர்களுக்கு உதவிய மதுரை சி.பி.ஐ. அதிகாரி கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதை தொடர்ந்து அந்த வழக்கு விசாரணை பாதிப்படைந்தது. அதே போன்று அங்கொட லொக்கா வழக்கு விசாரணையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story