திண்டிவனத்தில், பெண்ணை திருமணம் செய்து ரூ.6½ லட்சம் நகை-பணம் மோசடி - வாலிபர் கைது


திண்டிவனத்தில், பெண்ணை திருமணம் செய்து ரூ.6½ லட்சம் நகை-பணம் மோசடி - வாலிபர் கைது
x
தினத்தந்தி 12 Aug 2020 4:00 AM IST (Updated: 12 Aug 2020 8:27 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் பெண்ணை திருமணம் செய்து ரூ. 2 லட்சம், 12 பவுன் நகையை பெற்று ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம், 

திண்டிவனம் கிடங்கல் 1 பகுதியை சேர்ந்தவர் பழனி மனைவி ஆதிலட்சுமி (வயது 27). இவர் திண்டிவனம் நகரில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவருக்கு தனுஷா(10) என்கிற மகள் உள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக, ஆதிலட்சுமி தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கும், சஞ்சீவிராயன்பேட்டை முதல் தெருவை சேர்ந்த ராஜமூர்த்தி மகன் விக்கி என்கிற கணேஷ் (27) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

அப்போது, ஆதிலட்சுமியையும், அவரது மகளையும் நல்ல முறையில் பார்த்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஆதிலட்சுமியிடம் கணேஷ் நெருக்கமாக பழகி வந்தார். இதை தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் சென்னை மாதவரம் பாலாஜி நகரில் குடும்பம் நடத்தி வந்தனர்.

பின்னர் டிராவல்ஸ் வைத்து நடத்தலாம் எனக் கூறி அதற்கு தேவையான பணத்துக்கு ஆதிலட்சுமியிடம் இருந்து 12 பவுன் நகையை கணேஷ் பெற்றுள்ளார்.

ஆனால் இதற்காக பெற்ற கடனில் தவணை தொகையை கட்ட முடியாமல் போனது. இதையடுத்து அவர்கள் திண்டிவனம் திருவள்ளுவர் நகருக்கு வந்து குடித்தனம் நடத்தினார்கள். அப்போது 2 லட்சம் ரூபாய் கடனாகப் பெற்று ஆதிலட்சுமி கணேசிடம் வழங்கியுள்ளார். பணத்தை பெற்ற பின்னர், கணேஷ் ஆதிலட்சுமியை சந்தித்து பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.

இதையடுத்து ஆதிலட்சுமி, திண்டிவனம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக்கூறியும் தன் மகளை நல்லபடியாக கவனித்துக் கொள்வதாகவும் கூறி கணேஷ் பழகி வந்தார். இதற்காக என்னிடம் இருந்த 2 லட்சம் பணம் மற்றும் 12 பவுன் நகைகளை ஏமாற்றி வாங்கிக்கொண்டார்.

தற்போது வருகிற 24-ந்தேதி அவர் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய போவதை அறிந்து நேரில் சென்று கேட்டபோது அவரது தந்தை ராஜமூர்த்தி, தாய் பெரியநாயகி, அவரது தம்பிகள் முத்து, விஷ்ணு, பாபு ஆகியோர் என்னை அடித்து துன்புறுத்தி தகாத வார்த்தையால் திட்டினார்கள். எனது பணம் மற்றும் நகைகளை பெற்று என்னை ஏமாற்றிய கணேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து, கணேசை கைது செய்தார்.

கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணை திருமணம் செய்து ரூ.6½ லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை பெற்று வாலிபர் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story