ஈரோட்டில் திடீரென வைக்கப்பட்ட சாமி சிலைகளை அகற்றக்கோரி போராட்டம்
ஈரோட்டில் திடீரென வைக்கப்பட்ட சாமி சிலைகளை அகற்றக்கோரி பெரியாரிய உணர்வாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு,
ஈரோடு காளைமாட்டு சிலை பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் புதிய வணிக வளாகம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் சிலர் அங்குள்ள பஸ் நிறுத்தத்திற்கு அருகில் உள்ள காலி இடத்தில் புதிதாக பீடம் அமைத்து விநாயகர், முருகன், அம்மன் சிலைகளை நேற்று பிரதிஷ்டை செய்தனர்.
இந்தநிலையில் காலி இடத்தில் சாமி சிலைகளை வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் அங்கு திரண்டனர். அவர்கள் சிலைகளை அகற்றக்கோரி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு சூரம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “காளைமாட்டு சிலை பகுதியில் ஏற்கனவே பொது கழிப்பறை கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. தற்போது அங்கு சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. எனவே சிலைகளை அகற்ற வேண்டும்”, என்று கூறினார்கள்.
அதன்பிறகு அங்குள்ள சிலைகள் அகற்றப்பட்டன. மேலும், சிலைகள் வைக்கப்பட்ட பீடமும் இடிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே சிலைகள் அகற்றப்பட்ட தகவல் கிடைத்ததும் பா.ஜ.க.வினர் அங்கு திரண்டனர். அவர்கள் சிலைகளை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். அப்போது போலீசார், உரிய அனுமதியில்லாமல் சிலை வைக்கப்பட்டதால் அகற்றப்பட்டதாக விளக்கம் அளித்தனர். அதன்பின்னர் அவர்கள் திரும்பி சென்றனர்.
இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.
Related Tags :
Next Story