ஈரோடு மாவட்டத்தில், புதிதாக 17 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருந்தது. குறிப்பாக ஈரோடு மாநகராட்சி பகுதியில் பாதிப்பு அதிகமாக காணப்பட்டது. இதனால் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வந்தது.
நேற்று முன்தினம் நிலவரப்படி 1,101 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 3 பேர் கோவை, திருப்பூர், சென்னை ஆகிய மாவட்ட பட்டியலுக்கு தலா ஒருவர் வீதம் மாற்றப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,098 ஆக அதிகரித்தது.
இந்தநிலையில் நேற்று புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,115 ஆக உயர்ந்தது. கடந்த சில நாட்களாக பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், நேற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து இருப்பது ஈரோடு மக்களுக்கு சற்று ஆறுதலை அளித்து உள்ளது. இதில் ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட சிவராமன் வீதி, வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி, பெரியவலசு, ரங்கம்பாளையம், கருங்கல்பாளையம் ஆகிய பகுதிகளிலும், பெருந்துறை, மொடக்குறிச்சி அருகே லக்காபுரம், ஆப்பக்கூடல், பவானி காமராஜ்நகர், கொடுமுடி ஆவடியார்பாறை, வெள்ளோடு, தாளவாடி ராமபுரம் ஆகிய பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அங்கு கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 709 பேர் குணமடைந்து உள்ளனர். இதில் நேற்று 19 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதில் 389 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் இதுவரை 17 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
Related Tags :
Next Story