நடிகர் சஞ்சய் தத்துக்கு நுரையீரல் புற்றுநோய்? சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகுவதாக அறிவித்தார்


நடிகர் சஞ்சய் தத்துக்கு நுரையீரல் புற்றுநோய்? சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகுவதாக அறிவித்தார்
x
தினத்தந்தி 13 Aug 2020 3:11 AM IST (Updated: 13 Aug 2020 3:11 AM IST)
t-max-icont-min-icon

இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு நுரையீரல் புற்று நோய் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தநிலையில் சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகுவதாக அவர் தெரிவித்து உள்ளார்.

மும்பை, 

பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத். 61 வயதான இவருக்கு சில நாட்களுக்கு முன்பு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் மும்பையில் உள்ள லீலாவதி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. ஆனால் தொற்று பாதிப்பு இல்லை என்று தெரியவந்தது.

இதனால் மூச்சுத்திணறலுக்கு சிகிச்சை பெற்ற பிறகு அவர் கடந்த திங்கட்கிழமை வீடு திரும்பினார். இந்தநிலையில் சஞ்சய் தத்துக்கு நுரையீரல் புற்று நோய் இருப்பதாக தகவல்கள் கசிந்தன.

இந்த பரபரப்புக்கு மத்தியில் சஞ்சய் தத் டுவிட்டரில் பதிவு ஒன்றை போட்டார். அதில், மருத்துவ சிகிச்சைக்காக சினிமா பணியில் இருந்து சிறிது இடைவெளி விட உள்ளேன் என்று கூறிய அவர், தனது உடல் நிலை குறித்து பரவும் வதந்திகளை ரசிகர்கள் நம்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

வதந்தியை நம்ப வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டாலும், வலைத்தள பதிவு அவரது உடல் நல பாதிப்பை உறுதி செய்ததாக அமைந்தது.

மனைவி வேண்டுகோள்

இதற்கு மத்தியில் சஞ்சய் தத்தின் மனைவி மான்யதா தனது வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

எனது கணவர் ஒரு போராளி. முந்தைய காலங்களிலும் போராட்டங்களை அனுபவித்து உள்ளார். தற்போது பரவும் வதந்திகளுக்கு ரசிகர்கள் இரையாக வேண்டாம். எங்களுக்கு ஆதரவாக இருங்கள். பிரார்த்தனை செய்யுங்கள். அவர் எப்போதும் மோசமான சூழலுக்கு மத்தியில் வெற்றியாளராக வெளிப்பட்டு உள்ளார். இதுவும் கடந்துபோகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நடிகர் சஞ்சய் தத், இந்தி திரையுலகில் கோலோச்சிய நர்கிஸ்- சுனில் தத் தம்பதியின் மூத்த மகன் ஆவார். மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்த குற்றத்துக்காக 5 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்தவர். தற்போது சஞ்சய் தத்தின் 3 படங்கள் திரைக்கு வர காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story