சித்ரதுர்கா அருகே பரிதாபம் ஓடும் பஸ்சில் தீப்பிடித்தது; 5 பேர் உடல் கருகி பலி
இரியூர் அருகே ஓடும் ஆம்னி பஸ் தீப்பிடித்துக் கொண்டது. இதில் பஸ்சில் பயணித்து வந்த குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியானார்கள். மேலும் 27 பயணிகள் தீக்காயம் அடைந்தனர்.
சிக்கமகளூரு,
பெங்களூரு காட்டன்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் வினய். இவரது மனைவி கவிதா(வயது 29). இவர்களது மகள் நிச்சிதா(3). இந்த நிலையில் கவிதா விஜயாப்புராவில் உள்ள தனது அக்காள் சீலா(33) என்பவரின் வீட்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றிருந்தார். பின்னர் அவர் தனது அக்காள் சீலா, அவரது குழந்தைகள் ஸ்பர்ஷா(8), சம்ருத்(5) மற்றும் தனது மகள் நிச்சிதா ஆகியோரை அழைத்துக் கொண்டு நேற்று முன்தினம் விஜயாப்புராவில் இருந்து பெங்களூரு கணேஷ்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு புறப்பட்டார்.
கவிதா உள்பட 5 பேரும் விஜயாப்புராவில் இருந்து பெங்களூருவுக்கு ஆம்னி பஸ் ஒன்றில் வந்து கொண்டிருந்தனர். அந்த பஸ்சில் டிரைவரும், கவிதா உள்பட 35 பயணிகளும் இருந்தனர். அந்த பஸ் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் தாலுகா கே.ஆர்.கேட் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது கவிதா தனது கணவருக்கு செல்போனில் குறுந்தகவல் அனுப்பிக் கொண்டிருந்தார்.
பஸ்சில் தீ
அந்த சந்தர்ப்பத்தில் திடீரென பஸ்சின் முன்பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. இதனால் டிரைவர் உடனடியாக பஸ்சை சாலையோரமாக நிறுத்தினார். இதற்கிடையே பஸ்சின் என்ஜின் பகுதியில் இருந்து புகை அதிக அளவில் வந்தது. இதனால் டிரைவர் பஸ்சில் இருந்த பயணிகளை அவசர, அவசரமாக கீழே இறங்க கூறினார். அதன்பேரில் பயணிகள் அனைவரும் இறங்கினர்.
ஆனால் கவிதாவும், அவரது மகள் மற்றும் குடும்பத்தினரும் கீழே இறங்குவதற்குள் பஸ்சில் தீப்பிடித்துக் கொண்டது. இதனால் செய்வதறியாது பதற்றம் அடைந்த கவிதாவும், அவரது அக்காள் மற்றும் குழந்தைகளும் கூச்சலிட்டனர். மேலும் கீழே இறங்கி நின்று கொண்டிருந்த மற்ற பயணிகளும், அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் பஸ் முழுவதும் தீப்பிடித்துக் கொண்டது. மேலும் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
5 பேர் கருகி சாவு
இதனால் பஸ் முழுவதும் தீயில் எரிந்து கருக ஆரம்பித்தது. இதில் பஸ்சுக்குள் சிக்கிக் கொண்ட கவிதா, அவரது மகள் நிச்சிதா, கவிதாவின் அக்காள் சீலா, அவருடைய குழந்தைகள் ஸ்பர்ஷா, சம்ருத் ஆகிய 5 பேரும் மரண ஓலமிட்டபடியே தீயில் உடல் கருகி பரிதாபமாக பலியானார்கள். அவர்கள் தங்களை காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டும் யாராலும் ஒன்றும் செய்ய இயலாமல் போய்விட்டது. குழந்தைகள் உள்பட 5 பேரும் தங்கள் கண்முன்னே தீயில் கருகி துடிதுடித்து பலியானதைப் பார்த்த மற்ற பயணிகள் அலறி துடித்தனர்.
இதற்கிடையே சம்பவம் குறித்து இரியூர் தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் பஸ்சின் டிரைவர் தகவல் தெரிவித்துவிட்டு தலைமறைவாகி விட்டார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினரும், போலீசாரும் விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு துறையினர் பஸ்சின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதற்கிடையே இதுகுறித்து அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதிகா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டார். பின்னர் பஸ்சில் வந்த மற்ற பயணிகளிடம் விசாரணை நடத்தி விவரங்களை கேட்டறிந்தார்.
டிரைவருக்கு வலைவீச்சு
அதையடுத்து பஸ்சுக்குள் உடல் கருகி இறந்து கிடந்த கவிதா உள்ளிட்ட 5 பேரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இரியூர் மற்றும் சித்ரதுர்கா மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தில் தீக்காயம் அடைந்திருந்த 27 பயணிகளையும் மீட்டு சிகிச்சைக்காக இரியூர் ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
பஸ்சில் தீப்பிடித்ததற்கான காரணம் தெரியவில்லை. அதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமறைவான பஸ் டிரைவரையும் போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் கவிதா எஸ்.மன்னிகேரி ஆஸ்பத்திரிக்கு சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story