முகநூல் அவதூறு கருத்தால் பெங்களூருவில் பயங்கர வன்முறை போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி
முகநூலில் வெளியான அவதூறு கருத்தால் பெங்களூருவில் பயங்கர வன்முறை ஏற்பட்டது. இதைதொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக எம்.எல்.ஏ.வின் உறவினர் உள்பட 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் பெங்களூருவில் 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டு உள்ளது.
பெங்களூரு,
பெங்களூரு புலிகேசிநகர் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் அகண்ட சீனிவாசமூர்த்தி.
எம்.எல்.ஏ. வீட்டுக்கு தீவைப்பு
இவரது அக்காள் மகன் நவீன். இவர், நேற்று முன்தினம் மாலையில் சிறுபான்மையினர் சமுதாயத்திற்கு எதிராக சில கருத்துகளை முகநூலில் பதிவிட்டதாக தெரிகிறது. அந்த முகநூல் பதிவுக்கு சிறுபான்மையினர் அமைப்பை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். பின்னர் நேற்று முன்தினம் இரவு அகண்ட சீனிவாசமூர்த்தியின் வீடு மீது மர்மநபர்கள் கற்களை வீசி தாக்கினார்கள். அவரது வீட்டுக்கும் மர்மநபர்கள் தீவைத்தனர். ஆனால் எம்.எல்.ஏ.வும், அவரது குடும்பத்தினரும் வீட்டில் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
அத்துடன் அகண்ட சீனிவாசமூர்த்தியின் உறவினர் நவீன் வீட்டுக்கும், காவல்பைர சந்திராவை சேர்ந்த ஒரு கோவிலின் நிர்வாகியான முனே கவுடா என்பவரின் வீட்டுக்கும் தீவைக்கப்பட்டது. எம்.எல்.ஏ.வின் வீட்டு முன்பாக நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களுக்கும் தீவைக்கப்பட்டது. மேலும் டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையம் முன்பாக திரண்ட நூற்றுக்கணக்கானோர் முகநூல் பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்த முயன்றும் கேட்காமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி
போலீஸ் வாகனங்களுக்கும், சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களுக்கும் தீவைக்கப்பட்டது. இரும்பு கம்பிகள், அரிவாள் போன்ற ஆயுதங்களாலும் வன்முறையாளர்கள், டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி, காவல்பைர சந்திரா பகுதிகளில் உள்ள வாகனங்களை அடித்து நொறுக்கி துவம்சம் செய்தார்கள். அந்த 3 பகுதிகளிலும் உள்ள கடைகள், வீடுகள் மீதும் கற்களை வீசி தாக்கினார்கள். இதையடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு முதலில் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். ஆனாலும் வன்முறையாளர்களை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
மாறாக டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையத்திற்குள் புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினார்கள். போலீஸ் நிலையத்திற்கும் தீவைக்க முயன்றனர். இந்த நிலையில், வன்முறையாளர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 3 வாலிபர்கள் குண்டு பாய்ந்து பலியானார்கள். மேலும் பலர் குண்டுகாயம் அடைந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், பலியானவர்கள் கே.ஜி.ஹள்ளியை சேர்ந்த யாசின் பாட்ஷா(வயது 28), வாஜித் அகமது(25) மற்றும் நாகவாராவை சேர்ந்த சேக்சுதீன்(24) ஆகிய 3 பேர் என்று தெரியவந்தது.
78 போலீசார் படுகாயம்
வன்முறையில் ஈடுபட்டவர்கள் நடத்திய தாக்குதலில் 2 துணை போலீஸ் கமிஷனர்கள் உள்பட 78 போலீசார் காயம் அடைந்துள்ளனர். 200 முதல் 250 வாகனங்கள் சேதம் அடைந்திருப்பதாக போலீஸ் கமிஷனர் கமல்பந்த் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், வன்முறை நடந்த பகுதியில் நேற்று காலையில் இருந்து அமைதி திரும்பியது. டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி, காவல் பைர சந்திராவில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாலும், பெங்களூரு நகர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும், மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினார்கள். அப்பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. அங்குள்ள சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
எஸ்.டி.பி.ஐ. பிரமுகர் கைது
இதற்கிடையில், டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி பிரமுகரான முஜாமில் பாட்ஷா, ஆயாஜ் ஆகியோரை கைது செய்தார்கள். அவர்கள் 2 பேரும் வன்முறைக்கு காரணமான முக்கியமானவர்கள் என்றும், வன்முறையை தூண்டி விட்டதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதவிர கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலமாக 148 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்து உள்ளனர்.
பரபரப்பு, பதற்றம்
இந்த வன்முறைக்கு மூலக்காரணமாக இருந்த அகண்ட சீனிவாசமூர்த்தியின் மருமகனான நவீனையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் மீது சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி பகுதிகளில் அமைதி திரும்பினாலும், அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
பெங்களூருவில் 144 தடை உத்தரவு
பெங்களூரு வன்முறை தொடர்பாக பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெங்களூருவில் நடந்த கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர். வன்முறையாளர்கள் கல்வீசி தாக்கியதில் 60 போலீஸ்காரர்கள் வரை காயம் அடைந்து உள்ளனர். போலீஸ் வாகனங்கள் உள்பட 250 வாகனங்களுக்கு வன்முறையாளர்கள் தீ வைத்து உள்ளனர். தற்போது கலவரம் நடந்த பகுதிகளில் நிலவரம் கட்டுக்குள் வந்து உள்ளது.
முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரு முழுவதும் 144 தடை உத்தரவும், டி.ஜே.ஹள்ளி, காவல் பைரசந்திரா மற்றும் கே.ஜி.ஹள்ளி போலீஸ் நிலைய பகுதிகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story