5 போலீசாருக்கு கொரோனா: கீழ்வேளூர்-வேளாங்கண்ணி போலீஸ் நிலையங்கள் மூடல்
5 போலீசாருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து கீழ்வேளூர், வேளாங்கண்ணி ஆகிய இடங்களில் உள்ள போலீஸ் நிலையங்கள் மூடப்பட்டன.
சிக்கல்,
நாகை மாவட்டம் கீழ்வேளூரில் உள்ள போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் காவலருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு பணிபுரிந்து வந்த அனைத்து போலீசாருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் முடிவுகள் நேற்று தெரியவந்தன. இதில் ஒரு ஏட்டு மற்றும் ஒரு பெண் காவலருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து போலீஸ்காரர்கள் 2 பேரும் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
போலீசாருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து நேற்று போலீஸ் நிலையம் மூடப்பட்டு, ‘சீல்’ வைக்கப்பட்டது. முன்னதாக அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் வழக்குகள் தொடர்பான கோப்புகள் கீழ்வேளூர் தெற்கு வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, போலீஸ் நிலையம் அங்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் போலீஸ் நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கீழ்வேளூர் அருகே நீலப்பாடி ஊராட்சியில் நேற்று ஒரே தெருவில் 8 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் திருவாரூரில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்ததாகவும் அவர் மூலமாக மற்றவர்களுக்கும் தொற்று பரவியதாகவும் கூறப்படுகிறது. சுகாதார துறையினர் அந்த பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல் வேளாங் கண்ணி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து நேற்று இரவு வேளாங்கண்ணி போலீஸ் நிலையம் மூடப்பட்டது. போலீஸ் நிலையத்தை வேறு இடத்தில் செயல்பட வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
போலீசாருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து வேளாங்கண்ணி பேரூராட்சி சார்பில் போலீஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story