தேர்வு எழுதுவதற்கான அங்கீகாரம் பெறவில்லை: 19 எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி


தேர்வு எழுதுவதற்கான அங்கீகாரம் பெறவில்லை: 19 எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி
x
தினத்தந்தி 13 Aug 2020 4:48 AM IST (Updated: 13 Aug 2020 4:48 AM IST)
t-max-icont-min-icon

அரியாங்குப்பத்தில் தேர்வு எழுதுவதற்கான அங்கீகாரம் பெறாதநிலையில் தனியார் பள்ளியில் படித்த எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியாங்குப்பம்,

அரியாங்குப்பம் கோட்டைமேட்டில் உள்ள தனியார் ஆங்கில உயர்நிலைப்பள்ளியில் அந்த சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆனால் இந்த பள்ளி எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு எழுதுவதற்கான அங்கீகாரம் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அங்கு கடந்த கல்வி ஆண்டில் (2019-2020) எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்த 11 மாணவர்கள், 8 மாணவிகளை தனியார் மூலம் பொதுத்தேர்வு எழுத பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்து வந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் கொரோனாவால் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அரியாங்குப்பம் கோட்டைமேட்டில் உள்ள தனியார் ஆங்கிலப் பள்ளியில் இருந்து மாணவர்கள் படித்ததற்கான பட்டியலை கல்வித்துறைக்கு அனுப்பவில்லை.

இதுபற்றிய விவரம் தெரியாத நிலையில் கடந்த 10-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து இந்த பள்ளியில் படித்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக கருதி நேற்று காலை அங்கு சென்று தங்களுக்கான மதிப்பெண் பட்டியலை கேட்டனர். அப்போது தான் பள்ளியில் இருந்து கல்வி துறைக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் மாணவர்களின் பட்டியலை அனுப்பாததும், இதனால் அவர்கள் தேர்ச்சி பெறாததும் தெரியவந்தது. இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

பள்ளி முற்றுகை

இதைத்தொடர்ந்து கோட்டைமேடு தனியார் ஆங்கிலப் பள்ளி முன் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் திரண்டு திடீரென முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து அவர்களிடம் பள்ளியின் நிர்வாகி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படாததையடுத்து போராட்டம் நீடித்தது.

இதுபற்றிய தகவல் அறிந்து அரியாங்குப்பம் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போதும் மாணவர்களும், பெற்றோர்களும் போராட்டத்தினை கைவிட மறுத்தனர். இதன்பின் தொகுதி எம்.எல்.ஏ.வான ஜெயமூர்த்தி அங்கு வந்து இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது மாணவர்களின் வாழ்க்கை பிரச்சினை என்பதால் உடனடியாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும்படி பள்ளி நிர்வாகியிடம் கேட்டுக் கொண்டார். உடனே இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளை சந்தித்துப் பேசி மாணவர்களுக்கு சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதன்பிறகு மாணவர்களும், பொதுமக்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கேள்விக்குறியான எதிர்காலம்

தற்போது பிளஸ்-1 வகுப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் பட்டியல் அவசியம் தேவை என்ற நிலையில் கோட்டைமேடு பகுதியில் உள்ள தனியார் ஆங்கிலப் பள்ளியில் படித்த 19 மாணவர்களின் பட்டியல் கல்வி துறைக்கு அனுப்பப்படாத நிலையில் அவர்களது நிலைமை கேள்விக்குறியாகி உள்ளது.

இதுகுறித்து அந்த பள்ளியில் படித்து வந்த மாணவர்கள் கூறும்போது, நாங்கள் படித்து வந்த பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுவதற்கான அங்கீகாரம் பெறாதது குறித்த விவரம் எதுவும் தெரிவிக்கப்படாமல் மறைக்கப்பட்டுள்ளது. மதிப்பெண் பட்டியலை கேட்டு வந்தபோது தான் அது தெரியவந்துள்ளது. காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் நாங்கள் 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று இருந்தோம். அதன் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும் என்று அரசு அறிவித்து இருந்தநிலையில் நாங்கள் தற்போது ஏமாற்றப்பட்டு இருக்கிறோம். உடல்நிலை சரியில்லாத போதிலும் பள்ளியின் அறிவுறுத்தல்படி சிறப்பு வகுப்புகளிலும் கலந்து கொண்டோம். எங்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் எங்கள் எதிர்காலமே பாழாகி விடும். சம்பந்தப்பட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுத்து அரசு எங்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தனர்.

Next Story