திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 18 ஆயிரத்தை தாண்டியது ஒரே நாளில் 11 பேர் தொற்றுக்கு பலி


திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 18 ஆயிரத்தை தாண்டியது ஒரே நாளில் 11 பேர் தொற்றுக்கு பலி
x
தினத்தந்தி 13 Aug 2020 6:05 AM IST (Updated: 13 Aug 2020 6:05 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 407 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாயினர். இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியது.

திருவள்ளூர், 

திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெரியகுப்பம், ராஜாஜிபுரம், நேதாஜி சாலை போன்ற பகுதிகளில் நேற்று கொரோனா வைரசால் 12 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடம்பத்தூர் ஒன்றியத்தில் மணவாளதகர், மப்பேடு, கடம்பத்தூர், போளிவாக்கம், கீழ்நல்லாத்தூர், கொப்பூர், பண்ணூர் போன்ற பகுதிகளில் 16 பேர் பாதிக்கப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 407 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரையில் கொரோனா வைரசால் 18 ஆயிரத்து 96 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 14 ஆயிரத்து 77 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

3 ஆயிரத்து 710 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் கொரோனாவால் 11 பேர் இறந்துள்ளனர். இதனால் மாவட்டம் முழுவதும் பலியானவர்கள் எண்ணிக்கை 309 பேர் ஆக உயர்ந்துள்ளது.

வண்டலூர்

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 50 பேர், நத்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 40 பேர், ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராம பகுதிகளில் 19 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 439 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19 ஆயிரத்து 175 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 15 ஆயிரத்து 829 பேர் ஆஸ்பத்திரியில் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று ஒரே நாளில் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 322 ஆக உயர்ந்தது. 3 ஆயிரத்து 24 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சாலமங்கலம் பகுதியை சேர்ந்த 48, 27, 58 வயதுடைய பெண்கள், ஒரகடம் பகுதியை சேர்ந்த 24 வயது ஆண் ஆகியோருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இவர்களுடன் சேர்த்து காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 371 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாயினர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 652 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 9 ஆயிரத்து 935 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று ஒரே நாளில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், மாவட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 322 ஆக உயர்ந்தது. 2,758 பேர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்

Next Story